ரூ.3 ஆயிரம் கோடி செலவில் சிலை அமைத்தது முட்டாள்தனம் : இங்கிலாந்து எம்பி.க்கள் கடும் விமர்சனம்

தினகரன்  தினகரன்
ரூ.3 ஆயிரம் கோடி செலவில் சிலை அமைத்தது முட்டாள்தனம் : இங்கிலாந்து எம்பி.க்கள் கடும் விமர்சனம்

லண்டன்,: ‘இங்கிலாந்திடம் ₹9 ஆயிரம் கோடி நிதியுதவி பெறும் இந்தியா, ₹3 ஆயிரம் கோடி செலவில்  ஒற்றுமை சிலை அமைத்தது முட்டாள்தனம். இந்தியாவின் நலத்திட்டங்களுக்கு இங்கிலாந்து இனி எந்த நிதியுதவியும் அளிக்க கூடாது’ என அந்நாட்டின் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி பீட்டர் போன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்த தினத்தை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றங்கரையில் 182 மீட்டர் உயரத்தில் உலகின் மிகப் உயரமான சிலையை பிரதமர் மோடி கடந்த மாதம் 31ம் தேதி திறந்து வைத்தார். இதற்கு ஒற்றுமை சிலை என பெயர் வைக்கப்பட்டது. இதற்கான செலவு ₹3 ஆயிரம் கோடி. இதை இங்கிலாந்து எம்.பி.க்கள் பலர் விமர்சித்துள்ளனர். கன்சர்வேடிவ் கட்சி எம்பி பீட்டர் போன் கூறுகையில், ‘‘பல்வேறு நலத் திட்டங்களுக்காக இங்கிலாந்திடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 1.1 பில்லியன் பவுண்ட் (₹9,492 கோடி) நிதியுதவி பெற்றுள்ளது. அதே நேரத்தில் சுதந்திர போராட்ட வீரருக்காக ₹3 ஆயிரம் கோடி செலவில் சிலை வைத்துள்ளது. இது முற்றிலும் முட்டாள்தனமான செயல். இது மக்களை பைத்தியகாரனாக்கும் செயல்’’ என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு எம்பி டோரி என்பவர் கூறுகையில், ‘‘பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது அவர்கள் இஷ்டம். ₹3 ஆயிரம் கோடி செலவில் அவர்களால் சிலை அமைக்க முடிகிறது. அவர்களுக்கு நாம் எந்த நிதியுதவி அளிக்க தேவையில்லை என்பது தெளிவாக தெரிகிறது’’ என்றார். ‘‘அமெரிக்காவில் லிபர்ட்டி சிலையை விட இரு மடங்கு உயரத்தில் ஒற்றுமை சிலை வைத்துள்ள இந்தியாவுக்கு இங்கிலாந்து இனி எப்போதும் நிதியுதவி அளிக்க கூடாது’’ என்ற கருத்தை பல எம்.பி.க்களும் தெரிவித்துள்ளனர். ‘‘பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விண்வெளி, வர்த்தகம் உட்பட பல துறைகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது. அதற்கு வெளிநாட்டு உதவி அளிக்க கூடாது. இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். இருந்தாலும், உலகில் உள்ள பல ஏழை நாடுகளுக்கு, தான் பெறும் வெளிநாட்டு நன்கொடையை விட அதிகளவில் இந்தியா நிதியுதவி அளிக்கிறது’’ என இங்கிலாந்து விமர்சகர்கள் பலர் கூறியுள்ளனர்.  

மூலக்கதை