மகளிர் உலக டி20 இன்று தொடக்கம் : முதல் லீக்கில் இந்தியா - நியூசிலாந்து மோதல்

தினகரன்  தினகரன்
மகளிர் உலக டி20 இன்று தொடக்கம் : முதல் லீக்கில் இந்தியா  நியூசிலாந்து மோதல்

கயானா: ஐசிசி மகளிர் உலக டி20 கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.மகளிர் உலக கோப்பை டி20 தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 6வது முறையாக நடத்துகிறது. 2018ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் நடப்பு சாம்பியனாக வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், தகுதிச் சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடித்த வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. பத்து அணிகளும் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஏ பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகளும், பி பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.தொடக்க நாளான இன்று முதல் லீக் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கயானா தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இத்தொடரைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா 3 முறை டி20 கோப்பையை ெவன்றுள்ளது. நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் இம்முறையும் கோப்பையை தக்க வைக்க காத்திருக்கிறது. 2009ல் சாம்பியனான இங்கிலாந்தும் சாம்பியனாக வரிந்து கட்டுகிறது.இதற்கிடையே முதல் முறையாக டி20 சாம்பியனாக முயற்சிக்கும் அணிகளுள் ஒன்றாக இந்தியாவும் களத்தில் இறங்கி உள்ளது. நமது அணி முதல் முறையாக நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்க உள்ளது. துணை கேப்டன் மந்தனா அதிரடியில் சிறப்பாக செயல்படுபவர். பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் நல்ல பார்மில் உள்ளார். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் இந்திய வீராங்கனைகள் நல்ல பார்மில் இருப்பதால் இத்தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்பலாம்.இதற்கு முன் உலக டி20 தொடரில் 2009, 2010ல் நமது அணி அரை இறுதி வரை முன்னேறியது சிறப்பாகும். மற்ற தொடர்களில் லீக் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது. எனவே, இன்றைய முதல் போட்டியில் நியூசிலாந்ைத வீழ்த்தும் பட்சத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். இந்திய அணி விபரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா (துணை கேப்டன்), தன்யா பாட்டியா, எக்தா பிஷ்த், தயாளன் ஹேமலதா, மான்சி ஜோஷி, வேதா கிருஷ்ணமூர்த்தி, அனுஜா பாட்டீல், மிதாலி ராஜ், அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்திராகர், ராதா யாதவ் மற்றும் பூனம் யாதவ்.பாகிஸ்தானுடன் 11ம் தேதி சவால்:‘பி’ பிரிவில் இந்திய அணி மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதுகிறது. நாளை மறுதினம் நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை சந்திக்கிறது. 15ம் தேதி அயர்லாந்தையும், 17ம் தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர் கொள்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் கயானாவில் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.வரும் 25ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது.

மூலக்கதை