தங்கம் விற்பனை 10 சதவீதம் சரிவு

தினமலர்  தினமலர்
தங்கம் விற்பனை 10 சதவீதம் சரிவு

தமிழகத்தில், தீபாவளி பண்டிகையின் போது, தங்கம் விற்பனை, 10 சதவீதம் சரிந்துள்ளது. பண்டிகையை ஒட்டி, 1,114 கோடி ரூபாய்க்கு தங்கம் விற்பனையாகியுள்ளது.


கடந்த, 2016ல் தீபாவளி பண்டிகை, அக்., 28ல் கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய நாளில் தங்கம் கிராம், 2,859 ரூபாய்க்கும், பவுன், 22 ஆயிரத்து, 862 ரூபாய்க்கும், அடுத்த நாள், அக்.,29, கிராம், 2,868 ரூபாய்க்கும், பவுன், 22 ஆயிரத்து, 946 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த, 2017, தீபாவளி பண்டிகை, அக்., 18ல், கிராம், 2,810 ரூபாய்க்கும், பவுன், 22 ஆயிரத்து, 480 ரூபாய்க்கும், மறுநாள் அக்., 19 கிராம், 2,790 ரூபாய்க்கும், பவுன், 22 ஆயிரத்து, 344 ரூபாய்க்கும் விற்பனையானது.


நடப்பாண்டு, நவ., 6ல் தீபாவளி பண்டிகை நாளில் கிராம், 3,000 ரூபாய்க்கும், பவுன், 24 ஆயிரத் துக்கும், மறுநாள் கிராம், 3,009 ரூபாய்க்கும், பவுன், 24 ஆயிரத்து, 72 ரூபாய்க்கும் விற்பனை யானது. தீபாவளி நாளில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு கிராமுக்கு, 190 ரூபாயும், பவுனுக்கு, 1,520 ரூபாய் வரை விலை அதிகரித்தது.தமிழக தங்கம் வெள்ளி வைர நகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர், ஸ்ரீராம் கூறியதாவது:கடந்த, 2016ல் தீபாவளியை ஒட்டி, 5,000 கிலோ, தங்கம் விற்ற நிலையில், 2017ல், 3,750 கிலோ விற்பனையானது. நடப்பாண்டில், தங்கம் விற்பனை, 10 சதவீதம் சரிவை சந்தித்து, 3,375 கிலோ விற்பனையாகி உள்ளது.


தற்போதைய நிலையில், ௧ கிலோ தங்கம், 33 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில், தீபாவளியை ஒட்டி, 1,113.75 கோடிக்கு, தங்கம் விற்பனை நடந்துள்ளது. இது, கடந்த ஆண்டின், 1,154 கோடி ரூபாய் விற்பனையுடன் ஒப்பிடுகையில், 40.25 கோடி ரூபாய் குறைவு.இவ்வாறு, அவர் கூறினார்.


– நமது சிறப்பு நிருபர் –

மூலக்கதை