சர்கார் சர்ச்சை காட்சிகளை நீக்க ஒப்புதல்

தினமலர்  தினமலர்
சர்கார் சர்ச்சை காட்சிகளை நீக்க ஒப்புதல்

கடந்த பல ஆண்டுகளாகவே விஜய்யின் படம் சர்ச்சையில் சிக்கி வருகின்றன. அந்தவகையில் தற்போது தீபவாளிக்கு வெளியாகி இருக்கும் சர்கார் படமும் சிக்கி உள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில், அரசின் இலவச திட்டங்களை தீயிட்டு கொளுத்துவது மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரை, வரலட்சுமிக்கு சூட்டி அவரை நெகட்டிவ்வாக சித்தரித்து இருப்பது போன்ற சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக.,வினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பிற்பகலில் இருந்து தமிழகம் முழுவதும் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் அதிமுக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதுடன், அங்குள்ள பேனர்களை கிழித்து எறிந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருப்பதாவது : தியேட்டர் உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று சர்கார் படத்தின் சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து படத்தை வெளியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமியிடமும், படத்தை தயாரித்த நிறுவனத்திடமும் பேசினோம். அவர்கள் சம்மதம் சொல்லியிருக்கிறார்கள். எந்தெந்த காட்சிகள் நீக்கப்படுவது என இன்று இரவு பேசி முடிவெடுக்க உள்ளோம்.

நாளை(நவ., 9) காலை தணிக்கை குழுவின் ஒப்புதலோடு சர்ச்சை காட்சிகள் நீக்கப்படும். மதியத்திற்கு பிறகு அந்தக்காட்சிகள் எந்த தியேட்டரிலும் இருக்காது. அதுவரை அதிமுக., வினர் அமைதி காக்க வேண்டுகிறோம். தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.

மூலக்கதை