கேமரூன் நாட்டில் கடத்தப்பட்ட 78 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு

தினகரன்  தினகரன்
கேமரூன் நாட்டில் கடத்தப்பட்ட 78 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு

யவுன்ட்:  கடந்த சில தினங்களுக்கு முன் கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளால் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேரும், ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவரும் கடத்தப்பட்டனர்.  கடத்தப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று தெரியவில்லை. அப்போது ஆங்கிலம் மொழி பேசும் சில பகுதிகளில் விடுதலை கேட்டு போராடி வரும் பிரிவினைவாதிகள் குழந்தைகளை கடத்தி சென்றிருக்கலாம் என கவர்னர் அடோல்பி லேல் கூறியிருந்தார். ஆனால் எதற்காக கடத்தப்பட்டார்கள் என்பது குறித்து எந்த வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு இருந்தது. இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்கள் 78 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஓட்டுனரும் விடுவிக்கப்பட்டார். ஆனால் கடத்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை விடுதலை செய்யாமல் இன்னும் பயங்கரவாதிகள் தங்கள் பிடியிலேயே வைத்துள்ளனர்.முன்னதாக ஆங்கிலம் பேசும் இரண்டு பகுதிகளை தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிவரும் ஆயுதக் குழுக்கள் பள்ளிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன.வட மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் ஆங்கில சட்ட, கல்வி அமைப்புகளுக்கு போதிய அங்கீகாரம் தருவதற்கு அரசு தவறிவிட்டதாக சொல்லப்பட்டதை அடுத்து, அப்பகுதியின் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட வெகுஜனப் போராட்டத்தை ஆயுதப் படையினர் ஒடுக்கினர். இதையடுத்து அம்பாஜோனியா என்ற புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2017-ம் ஆண்டு ஆயுதக் குழுக்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை