தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆஜராக முடியாது : மார்க் ஸூக்கர்பெர்க்

தினகரன்  தினகரன்
தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆஜராக முடியாது : மார்க் ஸூக்கர்பெர்க்

வாஷிங்டன் : தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் முன்பு நேரில் ஆஜராக முடியாது என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்பின் பிரச்சார நடவடிக்கைகளை இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் மேற்கொண்டது. அந்த நிறுவனம் பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி அவற்றை டிரம்புக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடியது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகி எம்.பி.களிடம் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளிடம் விளக்கமளித்த மார்க், உலகில் உள்ள மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் பேஸ்புக் உருவாக்கப்பட்டதாகவும், அதில் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவில்லை என்றும் கூறினார். மேலும் தேர்தலில் தலையீடு, போலியான செய்திகள் வெளியிடுதல் போன்ற தவறுகள் நடந்துவிட்டதாவும், இந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன் என்று மன்னிப்பும் கோரினார். இதனை தொடர்ந்து தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக மார்க் ஸூக்கர்பெர்க் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என அந்நாட்டு எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு கனடா, ஆஸ்திரேலியா, அர்ஜென்ட்டினா அயர்லாந்து நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் முன்பு நேரில் ஆஜராக முடியாது என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் கூறியுள்ளார்.

மூலக்கதை