ரசிகருடன் வார்த்தை போர்... சர்ச்சைக்குள்ளான கோஹ்லி

தினகரன்  தினகரன்
ரசிகருடன் வார்த்தை போர்... சர்ச்சைக்குள்ளான கோஹ்லி

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடாமல் ஓய்வெடுத்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினைத் தொடர்ந்து சாதனை மன்னனாகவும் ரன் மெஷினாகவும் விளங்கி வரும் அவர், ட்விட்டரில் ரசிகர் ஒருவருக்கு எதிராக தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. ‘இந்திய வீரர்களின் பேட்டிங்கை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தையே நான் அதிகம் விரும்புகிறேன். கோஹ்லி அளவுக்கதிகமாக புகழப்படுகிறார். அவரது ஆட்டத்தில் தனித்துவம் ஏதுமில்லை’ என்று அந்த ரசிகர் விஷமத்தனமாக தகவல் பதிந்திருந்தார். அவரது கருத்தால் கடுப்பான கோஹ்லி, ‘நீங்கள் இந்தியாவில் வசிப்பதில் அர்த்தமில்லை என நினைக்கிறேன். வேறு எங்காவது செல்லுங்கள். இங்கே வசித்துக் கொண்டு எதற்காக வேறு நாடுகளை விரும்புகிறீர்கள். நீங்கள் எனது ஆட்டத்தை விரும்பாதது குறித்து கவலையில்லை. ஆனால், நீங்கள் இங்கு இருக்க தேவையில்லை. உங்களுக்கு எது முக்கியம் என்பதை தீர்மானியுங்கள்’ என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். எனினும், மற்ற நாட்டு வீரர்களின் ஆட்டத்தை புகழ்வது, விரும்புவது பெரிய குற்றம் என்பது போல கோஹ்லி தெரிவித்த கருத்தை அனைத்து ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு எதிராகப் பலரும் தகவல் பதிந்து வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள கோஹ்லி ரசிகர்கள் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேற வேண்டும் என சொல்வாரா? என்றும்; வெளிநாட்டில் திருமணம், வேறு விளையாட்டுகளில் வெளிநாட்டு அணிகளுக்கு ஆதரவு, கபடி விளையாடாமல் வெளிநாட்டில் உருவான விளையாட்டை ஏன் விளையாடுகிறார்? வெளிநாட்டு மொழியை ஏன் பேசுகிறார்? அன்னிய உடைகளை ஏன் அணிகிறார்? என்று கேள்விக் கணைகளால் துளைத்து வருகின்றனர். கோஹ்லி போன்ற தலைசிறந்த வீரர், இது போல ரசிகருடன் வார்த்தைப் போரில் இறங்குவது சரியல்ல என்று பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை