இலங்கையுடன் முதல் டெஸ்ட் : இங்கிலாந்து வலுவான முன்னிலை

தினகரன்  தினகரன்
இலங்கையுடன் முதல் டெஸ்ட் : இங்கிலாந்து வலுவான முன்னிலை

காலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 342 ரன் குவித்தது. ஜென்னிங்ஸ் 46, ஜோ ரூட் 35, பட்லர் 38, சாம் கரன் 48, அடில் ரஷித் 35 ரன் எடுத்தனர். அபாரமாக விளையாடிய அறிமுக வீரர் பென் போக்ஸ் சதம் விளாசி அசத்தினார் (107 ரன், 202 பந்து, 10 பவுண்டரி). இலங்கை பந்துவீச்சில் தில்ருவன் பெரேரா 5, சுரங்கா லக்மல் 3, தனஞ்ஜெயா, ரங்கனா ஹெராத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 203 ரன்னுக்கு சுருண்டது. ஏஞ்சலோ மேத்யூஸ் அதிகபட்சமாக 52 ரன் எடுத்தார். கேப்டன் சண்டிமால் 33, டிக்வெல்லா 28, தில்ருவன் 21, குசால் மெண்டிஸ் 19, லக்மல் 15, டி சில்வா, ஹெராத் தலா 14 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி 4, லீச், ரஷித் தலா 2, ஆண்டர்சன், சாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 139 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன் எடுத்துள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை