கார் விற்பனை மந்தம்

தினமலர்  தினமலர்
கார் விற்பனை மந்தம்

மும்பை: முன் எப்போதையும் விட இந்த பண்டிகை காலத்தில், வாகன விற்பனை மந்தமாக இருக்கிறது. தீபாவளியை அடுத்து கிறிஸ்துமஸ் புத்தாண்டு என, பண்டிகைகள் இருந்தாலும், வாகன விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்பதால், பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து வருகின்றன.நாட்டின், டாப், 10 கார் தயாரிப்பு நிறுவனங்கள், 70 ஆயிரம் முதல், 85 ஆயிரம் கார்கள் அளவுக்கு கார் உற்பத்தியை நவம்பர் மாதத்தில் குறைத்துவிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்த மாதாந்திர கார் தயாரிப்பில் 25 சதவீதம் ஆகும்.மாருதி சுசூகி, டொயோட்டா கிர்லோஸ்கர், போர்டு இந்தியா ஆகிய நிறுவனங்கள், இந்த மாதத்தில் தீபாவளி மற்றும் வாராந்திர விடுமுறைகளை சேர்த்து, மொத்தம், 10 நாட்களுக்கு மேலாக, ஆலைக்கு விடுமுறை வழங்க இருப்பதாக தெரிகிறது.மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹோண்டா கார்ஸ் இந்தியா மற்றும் ரெனால்ட் நிஸான் ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள், தீபாவளியை முன்னிட்டு, 5 – 6 நாட்கள் தயாரிப்பு பணிகளை நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்ஸ்வேகன் நிறுவனம் நவம்பர், 2 முதல், 19 வரை உற்பத்தியை நிறுத்தி வைக்க இருப்பதாக தெரிகிறது.வழக்கமாக, பண்டிகை காலத்தை முன்னிட்டு, சில நாட்கள் உற்பத்தியை நிறுத்தி வைப்பது வாடிக்கையான ஒன்றுதான். என்றாலும், இம்முறை அதிக நாட்கள் நிறுத்தி வைப்பது கவனிக்கத்தக்கது.இதுகுறித்து நிறுவனங்கள் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், இத்துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இரு மாதங்களாக, வாகன விற்பனை குறைந்து வருகிறது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு, வட்டிவிகித உயர்வு, காப்பீட்டு தொகை உயர்வு ஆகியவை, மிக முக்கியமான காரணங்கள் ஆகும்.தீபாவளிக்கு முந்தைய வாரத்தில், கார்கள் விற்பனை, 10 முதல், 25 சதவீதம் அளவுக்கு குறைவாக இருந்தது. இதையடுத்து இதற்கு முன் இல்லாத அளவுக்கு, தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்க வேண்டிய நிலைக்கு, கார் தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், ஓர் அளவுக்கு மேல் சலுகைகள் தந்தால், அது நிறுவனத்தின் வருமானத்தை பாதிக்கும். எனவே, இருக்கும் தேவைக்கு ஏற்ப, கார் உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை