தீபாவளி விற்பனை : 40 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
தீபாவளி விற்பனை : 40 சதவீதம் அதிகரிப்பு

நாமக்கல்: தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு, கறிக்கோழி விற்பனை, கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு, 40 சதவீதம் உயர்ந்து, 2.50 கோடி கிலோ அளவுக்கு விற்பனையானது.தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.பண்ணை கொள்முதல்விலை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு -– பி.சி.சி., சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.வழக்கமாக, தீபாவளி நேரத்தில், கறிக்கோழி விற்பனை சூடுபிடிக்கும். கொள்முதல் விலை குறைந்ததால், கடைகளில் சில்லரை விலையும் அதிரடியாக சரிந்தது. அதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு நுகர்வு அதிகரித்தது.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேரத்தில், 1 கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை, 75 – 76 ரூபாய் என, இருந்தது. இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி கடந்த வாரம், 79 – 80 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.மேலும், கடந்த ஆண்டு, தீபாவளியை ஒட்டி, தமிழகம் முழுவதும், 1.70 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையானது. இந்த ஆண்டு, 40 சதவீதம் அதிகரித்து, 2.50 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அதேபோல், கறிக்கோழி உற்பத்தியும், 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.கறிக்கோழி உற்பத்தியும், மக்களிடையே நுகர்வு அதிகரிப்பு காரணமாக, அதன் விற்பனையும் உயர்ந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை