இன்று லக்னோவில் 2-வது டி20 : தொடரை வெல்ல இந்தியா முனைப்பு... பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

தினகரன்  தினகரன்
இன்று லக்னோவில் 2வது டி20 : தொடரை வெல்ல இந்தியா முனைப்பு... பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

லக்னோ: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, லக்னோவில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. ஒருநாள் போட்டித் தொடரில் கடுமையாகப் போராடிய அந்த அணி 1-3 என்ற கணக்கில் அந்த தொடரையும் இழந்தது. இந்த நிலையில், இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. குல்தீப் யாதவ், அறிமுக வீரர்கள் குருணல் பாண்டியா, கலீல் அகமதுவின் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன் மட்டுமே குவிக்க முடிந்தது. இதையடுத்து, 20 ஓவரில் 110 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 7.3 ஓவரில் 45 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. கேப்டன் ரோகித் ஷர்மா 6, தவான் 3, ரிஷப் பன்ட் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மணிஷ் பாண்டே 19 ரன் எடுத்து வெளியேறிய நிலையில், இந்தியா 83 ரன்னுக்கு 5வது விக்கெட்டை இழந்ததால் ஆட்டம் பரபரப்பானது. எனினும், தினேஷ் கார்த்திக் - குருணல் பாண்டியா ஜோடி கடைசி கட்டத்தில் பதற்றமின்றி விளையாடி வெற்றியை வசப்படுத்தியது. இந்தியா 17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து வென்றது. கார்த்திக் 31 ரன் (34 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), குருணல் பாண்டியா 21 ரன்னுடன் (9 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில், 4 ஓவரில் 15 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றிய குருணல், பேட்டிங்கிலும் அசத்தி ஆல் ரவுண்டராக ஜொலித்தார். அறிமுக போட்டியிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மற்றொரு அறிமுக வீரர் கலீல் அகமதுவும் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 16 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றதால் இந்திய வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். இந்த நிலையில், 2வது டி20 போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.தொடரை வெல்ல இந்தியாவும், பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீசும் வரிந்துகட்டுவதால் ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், ஷாபாஸ் நதீம்.வெஸ்ட் இண்டீஸ்: கார்லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்), பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷிம்ரோன் ஹெட்மயர், கீமோ பால், கியரன் போலார்டு, தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), ஆந்த்ரே ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஓஷேன் தாமஸ், கேரி பியரி, ஒபெத் மெக்காய், ரோவ்மன் பாவெல், நிகோலஸ் பூரன்.

மூலக்கதை