ஜிம்பாப்வேயுடன் முதல் டெஸ்ட் : வங்கதேசத்துக்கு 321 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்
ஜிம்பாப்வேயுடன் முதல் டெஸ்ட் : வங்கதேசத்துக்கு 321 ரன் இலக்கு

சிலெட்: ஜிம்பாப்வே அணியுடனான முதல் டெஸ்டில், வங்கதேச அணிக்கு 321 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சிலெட் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 282 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் மசகட்சா 52, ஷான் வில்லியம்ஸ் 88, மூர் 63* ரன் விளாசினர். வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 143 ரன்னில் சுருண்டது. 139 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே, நேற்று நடந்த 3ம் நாள் ஆட்டத்தில் 181 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மசகட்சா அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். டெய்லர் 25, வில்லியம்ஸ் 20, சிக்கந்தர் 25, சகாப்வா 20 ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 5, மிராஸ் 3, நஜ்முல் இஸ்லாம் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 321 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன் எடுத்துள்ளது. லிட்டன் தாஸ் 14, இம்ருல் கேயஸ் 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

மூலக்கதை