நியூசி.,-க்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி : டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

தினகரன்  தினகரன்
நியூசி.,க்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி : டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

துபாய்: நியூசிலாந்து அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில், 47 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன் குவித்தது. பஹார் ஸமான் 11, பாபர் ஆஸம் 79 ரன் (58 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), சோயிப் மாலிக் 19 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். முகமது ஹபீஸ் 53 ரன் (34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஆசிப் அலி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.நியூசிலாந்து பந்துவீச்சில் கிராண்ட்ஹோம் 2, பெர்குசன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. மன்றோ 2, கிராண்ட்ஹோம் 6 ரன்னில் வெளியேறினர். கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக 60 ரன் விளாசி (38 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர்.தொடக்க வீரர் பிலிப்ஸ் 26 ரன் எடுக்க, 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் (2 பேர் டக் அவுட்) ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். நியூசிலாந்து அணி 16.5 ஓவரில் 119 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஈஷ் சோதி 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 12.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்திருந்த நியூசிலாந்து, மேற்கொண்டு 23 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 47 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான் அணி 3-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது. பாபர் ஆஸம் ஆட்ட நாயகன் விருது, முகமது ஹபீஸ் தொடர் நாயகன் விருது பெற்றனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன.

மூலக்கதை