பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் : கச்சனோவ் சாம்பியன் .... ஜோகோவிச் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் : கச்சனோவ் சாம்பியன் .... ஜோகோவிச் அதிர்ச்சி

பாரிஸ்: பிரபல ஏடிபி டென்னிஸ் தொடரானா பாரிஸ் மாஸ்டர்ஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நட்சத்திர வீரர நோவாக் ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்திய ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.அரை இறுதியில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரை 7-6 (8-6), 5-7, 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச் (31 வயது), பைனலில் ரஷ்யாவின் இளம் வீரர் கச்சனோவை (22 வயது) எதிர்கொண்டார். தொடக்கத்தில் சற்று பின்தங்கிய கச்சனோவ், பின்னர் தனது மின்னல் வேக சர்வீஸ்களால் ஜோகோவிச்சை திணறடித்து புள்ளிகளைக் குவித்தார்.முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர், 2வது செட்டிலும் அதிரடியாக விளையாடி 7-5, 6-4 என நேர் செட்களில் வென்று தனது முதல் மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். தொடர்ச்சியாக 22 போட்டியில் வெற்றி பெற்று வந்த ஜோகோவிச்சின் ஆதிக்கம் இந்த அதிர்ச்சி தோல்வியால் முடிவுக்கு வந்தது. பாரிஸ் தொடரில் தனது 33வது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்று ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் இருந்த நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.முதல் முறையாக மாஸ்டர்ஸ் 1000 பட்டம் வென்றது குறித்து கச்சனோவ் கூறுகையில், ‘எனது டென்னிஸ் வாழ்க்கையில் இது மிகப் பெரிய வெற்றி. அதிலும், உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜோகோவிச் போன்ற தலைசிறந்த வீரருக்கு எதிராக வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். உலக தரவரிசையில் கச்சனோவ் 18வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை