கோப்பை வெல்லுமா இந்தியா: லக்னோவில் இரண்டாவது ‘டுவென்டி–20’ | நவம்பர் 05, 2018

தினமலர்  தினமலர்
கோப்பை வெல்லுமா இந்தியா: லக்னோவில் இரண்டாவது ‘டுவென்டி–20’ | நவம்பர் 05, 2018

லக்னோ: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டி இன்று லக்னோவில் நடக்கிறது. இந்திய வீரர்கள் ரன் மழை பொழியும் பட்சத்தில் கோப்பை வெல்லலாம். 

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் (அதிகாரப்பூர்வமாக விண்டீஸ்) அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி உ.பி.,யில் உள்ள லக்னோவில் இன்று நடக்கிறது. 

சுதாரிப்பாரா ரோகித்: முதல் போட்டியில் சறுக்கிய துவக்க வீரர், கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி இன்று சிறப்பான துவக்கம் தந்தால் நல்லது. கோஹ்லி இல்லாத நிலையில் ‘மிடில் ஆர்டரில்’ வந்த லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட்

உள்ளிட்டோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தினேஷ் கார்த்திக் 31 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்து தனது பேட்டிங் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி தந்தார். இது இன்றும் தொடர வேண்டும். இதேபோல ‘ஆல் ரவுண்டராக’ களமிறங்கிய குருனால் பாண்ட்யாவும் தன் பங்கிற்கு பின் வரிசையில் விளாசுவது இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது.

குல்தீப் ஜாலம்: பவுலிங்கை பொறுத்தவரையில் முதல் போட்டியில் பங்கேற்காத வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்று அணிக்கு திரும்பலாம் என்பதால் உமேஷ் யாதவ் வழி விட வேண்டியது இருக்கும். பும்ரா, கலீல் அகமதுவும் அணிக்கு நம்பிக்கை தருகின்றனர். சுழலில் குல்தீப் (3 விக்.,) ‘ஜாலம்’ தொடர்வது எதிரணிக்கு தொல்லை தான்.

பேட்டிங் சரிவு: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப், ராம்தின், ஹெட்மயர் என பலர் இருந்த போதும் ‘டாப் ஆர்டரில்’ சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. அனுபவ போலார்டு, பிராவோ, கேப்டன் பிராத்வைட் என பலரும் பொறுப்பற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இன்று இவர்கள் சுதாரித்துக் கொண்டால் இந்திய அணிக்கு சவால் கொடுக்கலாம்.

கேப்டன் பலம்: பவுலிங்கை பொறுத்தவரையில் ஒசானே தாமஸ், கேப்டன் பிராத்வைட் சிறப்பாக செயல்படுகின்றனர். அறிமுக வாய்ப்பு பெற்ற பியரே சுழற்பந்து வீச்சில் நம்பிக்கை தந்தார். போலார்டு, பேபியோ ஆலன், கீமோ பால் பந்துவீச்சு அணிக்கு கைகொடுக்காதது பலவீனம். ‘ஆல் ரவுண்டர்’ ஆன்ட்ரூ ரசல் காயத்தால் விலகியதும் அணிக்கு இழப்பு தான்.

முதன் முதலாக...

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டி இன்று லக்னோவில்  புதிதாக கட்டப்பட்ட எகனா சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இங்கு சர்வதேச போட்டி நடக்கவுள்ளது இது தான் முதன் முறை. 

மழை வருமா

லக்னோவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 28, குறைந்த பட்சம் 19 டிகிரி செல்சியஸ் இருக்கும். வானம் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பில்லை.

மூன்று வெற்றி

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2009 முதல் 2018 வரை மோதிய 9 ‘டுவென்டி–20’ போட்டிகளில் இந்திய அணி 3ல் வென்றது. 5ல் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. 

20 ரன்

இன்று ஷிகர் தவான் 20 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் 1000 ரன்கள் எட்டிய வீரர் ஆகலாம். 

* ரிஷாப் பன்ட் 3 சிக்சர் அடித்தால் ‘டுவென்டி–20’ கிரிக்கெட்டில் 100 சிக்சர் என்ற மைல்கல்லை எட்டலாம்.

* வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்று 2 விக்கெட் வீழ்த்தினால், இவ்வகை போட்டிகளில் 150 விக்கெட் என்ற இலக்கை அடையலாம்.

ஆடுகளம் எப்படி

 

லக்னோ மைதானத்தில் 130 ரன்கள் எடுத்தாலே, ‘சேஸ்’ செய்வது கடினம். ஆடுகள பராமரிப்பாளர் ஒருவர் கூறுகையில்,‘‘ இங்கு அதிக ரன்கள் எடுக்க முடியாது. ஆடுகளத்தின் இரு பக்கத்தில் வெடிப்புகள் காணப்படுகிறது. பந்துகள் நன்றாக எகிறாது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கொண்டாட்டம் தான்,’’ என்றார்.

மூலக்கதை