நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு இடைக்காலத் தடை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு இடைக்காலத் தடை!

தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட இருந்த  நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம், இடைக்காலத் தடை விதித்து உள்ளது. 

தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையை குடைந்து சுரங்கம் அமைத்து, அதில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கடந்த 2011ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.

 மலையைக் குடைந்து சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த ஆய்வகத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் சுற்றுச்சூழல் அழியும் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 

மேலும், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறிய பசுமை தீர்பாயம், இந்த திட்டத்தை தொடர அனுமதி மறுத்தது. 

ஆனால், கடந்த ஜனவரியில் தமிழக அரசுடன் எந்தவித ஆலோசனையும் கேட்காமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், டாடா நிறுவனத்துக்கு நியூட்ரினோ மைய ஆய்வகப் பணிகளைத் தொடர அனுமதி வழங்கியது.

 இதை எதிர்த்து ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற அமைப்பு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் கூறி இருந்ததாவது

 ‘நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மக்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் ஆய்வகத்துக்கு அனுமதி கொடுப்பது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ள அனுமதி, சட்ட விதிகளுக்கு புறம்பாக உள்ளதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ 

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் விஞ்ஞானி நவீன் குமார் சின்கா ஆஜராகி விளக்கம் அளித்தார். 

‘தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால்தான், இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக இது “ஏ” கிரேடு வகை சார்ந்த திட்டம். மாநில சுற்றுச்சூழல் துறை ஆய்வு நடத்தவில்லை என்பதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? அதற்கான அவசியமும் கிடையாது’ என தெரிவித்து இருந்தார். 

ஆனால், இதற்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு கணக்கீட்டு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

 ‘ஆய்வு மையம் அமைக்கப்படும் இடத்தில் வெறும் கட்டிடங்கள் மட்டும் கட்டப்படவில்லை. அங்குள்ள மலைகள் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. இதனால், கதிர்வீச்சுக்கள் சுற்றுப்புறச் சூழலை கண்டிப்பாக பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் நாங்கள் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை’ என ஆணையம் தெரிவித்தது.  

தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், ‘நாட்டின் முக்கிய திட்டம் என்பதால்தான் இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதில், சுற்றுச்சூழல் ஆய்வு நடத்தாதது என்பது அவர்களின் குறையாகும். அதேபோல், திட்டம் குறித்து கண்டிப்பாக மக்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு குறித்த தங்கள் வாதங்களை மத்திய ,மாநில அரசுகள், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மனுதாரர் சார்பில் எழுத்துப்பூர்வமான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

அதனைப்  பரிசீலனை செய்த தேசிய பசுமை தீர்ப்பாய ஆணையர்கள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம்  ஒத்திவைத்தனர். 

இந்த நிலையில், இந்த வழக்கில் ஆணையர்கள் ஆர்எஸ்.ரத்தோர், சத்தியவான் சிங் கர்பயல் ஆகியோர்  அதிரடி உத்தரவைப் பிறப்பித்தனர். 

அதில் கூறி இருப்பதாவது: 

“நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதில் எந்த தவறும் கிடையாது.   இருப்பினும், ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ள இடம் மக்கள் பயன்பாட்டில் இருந்து 5 கிமீக்கு அப்பால் இருக்க வேண்டும். 

ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. மேலும், இந்த திட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சார்ந்து வருகிறது. இதனால், அங்கு வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு வராதா? எனவே, இந்த திட்டத்தால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதி செய்வதற்காக, தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

அதுவரை ஆய்வு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி, திட்ட நடைமுறை, ஆய்வு செய்தல் ஆகிய அனைத்து பணிகளுக்கும்  இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’’ 

இவ்வாறு உத்தரவிட்டனர். இதனால், நியூட்ரினோ திட்டம் முடங்கும் நிலை உருவாகி இருக்கிறது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பால் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அதிருப்தி அடைந்துள்ளது. இது பற்றி இந்த அமைப்பின் வழக்கறிஞர் ரித்விக் தத்தா கூறியதாவது:

“இந்த வழக்கில் நியூட்ரினோ திட்டத்துக்கு  ஒட்டு மொத்தமாக தடை விதித்து இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதியைப் பெறும்படி கூறி இருப்பது சரியல்ல. ஒருவேளை, தேசிய வனவிலங்கு வாரியம் அப்படிப்பட்ட அனுமதியை வழங்கும் பட்சத்தில், நியூட்ரினோ திட்டத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது. அதனால், அதன் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை