காற்று மாசால் உலகம் முழுவதும் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

காற்று மாசால் உலகம் முழுவதும் 2016ம் ஆண்டு 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்து உள்ளது. 

ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் காற்று மாசுபாடு மற்றும் உலக சுகாதாரம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் காற்று மாசு தொடர்பாக அறிக்கை ஒன்றை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதில் மாசடைந்த காற்றால் 2016ம் ஆண்டு உலகம் முழுவதும் 15 வயதிற்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளது. மேலும் உலகில் உள்ள 93 சதவீதம் குழந்தைகள் தினமும் மாசடைந்த காற்றையே சுவாசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நடுத்தர மற்றும் ஏழை நாடுகளில் 98 சதவீதம் குழந்தைகள் காற்று மாசால் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 

அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 52 சதவீதம் குழந்தைகள் மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் 2016ம் ஆண்டில் வீடுகளில் ஏற்படும் மாசு மற்றும் வாகனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றால் ஏற்பட்ட  மாசால் 5 வயதிற்கு உட்பட்ட 1,01,788 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். 

தமிழகத்தில் காற்று மாசு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மாசடைந்த காற்றை கர்ப்பிணிப் பெண்கள் சுவாசிப்பதால் எடை குறைவான குழந்தைகள் பிறப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை