இந்தியா வந்த இத்தாலி நாட்டு பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இந்தியா வந்த இத்தாலி நாட்டு பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!

இந்தியா வந்த இத்தாலி நாட்டு பிரதமருடன் இருதரப்பு உறவுகள், முதலீடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 

மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடந்தும், இந்திய-இத்தாலி தொழில்நுட்ப உச்சி மாநாடு டெல்லியில்  நடந்தது.

இந்த மாநாட்டில் பங்கேற்க இத்தாலி பிரதமர் கியூசெப்சே கோன்டே ஒருநாள் பயணமாக, டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார்.

இரு நாட்டு பிரதமர்களும், தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். இதில், மருத்துவம், விண்வெளி, கல்வி, தூய்மை தொழில்நுட்பம், மாற்று எரிசக்தி, தகவல் தொடர்பு போன்ற பல்வேறு துறைகள் குறித்து விவாதம் நடந்தது.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

 ‘‘தொழில்நுட்பம் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மிகப்பெரிய வளர்ச்சிக்கு இன்னும் அதிகப்படியான தொழில்நுட்பங்கள் நமக்குத் தேவை.

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மிக வேகமாக அதிகரித்து உள்ளது. தற்போது மாதத்திற்கு 250 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை நடக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 1 ஜிபி இணைய கட்டணம் 90 சதவீதம் குறைந்திருக்கிறது.’’ இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையடுத்து, பிரதமர் மோடி-கோன்டே இடையேயான சந்திப்பு நடந்தது. இதில் இரு தரப்பு உறவுகள், முதலீடு, வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேலும் பலப்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்தியா, இத்தாலி இடையே கடந்த நிதியாண்டில் 72 ஆயிரம் கோடியாக இருந்த வர்த்தகம், 2017-18ம் நிதியாண்டில் ரூ. 86 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை