உலகக்கோப்பையில் தோனி இடம்பெறுவார்: கவாஸ்கர் கணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலகக்கோப்பையில் தோனி இடம்பெறுவார்: கவாஸ்கர் கணிப்பு

புதுடெல்லி:  தோனியின் ஆலோசனை விராட் கோஹ்லிக்கு தேவைப்படுவதால் உலகக்கோப்பை போட்டியில் டோனி இடம்பெறுவது அவசியமான ஒன்று என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரும், சிறந்த விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தடுமாறி வருகிறார்.

ரன் குவிப்பதில் வல்லவரான தோனி, வெஸ்ட் இண்டீசுடன் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிகளில் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரன்களை எடுக்கவில்லை. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. ஒருநாள் போட்டிகளில் இருந்தும் தோனி நீக்கப்படலாம் என்ற நிலை தற்போது உள்ளது.

தோனியின் தொய்வான ஆட்டம் தொடர்வதால், இளம் வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பன்ட்-க்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. தோனி அடுத்தடுத்து நீக்கப்படுவது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.



எனினும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியில், அனுபவ வீரரான தோனி இடம்பெறுவது அவசியம் என மூத்த வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மூத்த வீரர் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:   தோனி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கு அவசியம். மேலும், கூல் கேப்டனாக சாதித்த தோனியின் ஆலோசனை விராட்  கோலிக்கு தேவைப்படும்.

எனவே, உலகக்கோப்பை போட்டியில் தோனி இடம்பெறுவது அவசியம். உலகக்கோப்பையில்  விளையாடுவதை கருத்தில் கொண்டுதான் அவருக்கு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என கருதுகிறேன்.

உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட கால அவகாசம் இருப்பதால், சரிவில் இருந்து தோனி மீண்டு வருவார்.
அதிரடியாக விளையாடி வரும் ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக உருவெடுத்து வருகிறார்.

ரகானேவும் கூட கேப்டன்சி திறமைகள் உடையவர். இருவரும் விராட் கோஹ்லிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

 


.

மூலக்கதை