ஐஸ் விற்கும் குத்துச்சண்டை வீரர்: 17 தங்கம் வென்று சாதனை படைத்தவர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐஸ் விற்கும் குத்துச்சண்டை வீரர்: 17 தங்கம் வென்று சாதனை படைத்தவர்

புதுடெல்லி: சிறந்த குத்துச்சண்டை வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான தினேஷ்குமார், தற்போது ஐஸ் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அரியானா மாநிலம், பவானி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(30). இவர், இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

தேசிய சாம்பியனான  தினேஷ்குமார் 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்றவர். 2010 ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றார்.

பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ள  தினேஷ்குமார் 17 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். சிறந்த வீரருக்கான அர்ஜுனா விருதும் பெற்றவர்.

2014ம் ஆண்டு  நடந்த சாலை விபத்தில் தினேஷ்குமார் பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து விளையாட்டில் அவரால் சோபிக்க முடியவில்லை.   தினேஷ்குமாரின் சிகிச்சை மற்றும் பயிற்சிக்காக லட்சக்கணக்கில் அவரது தந்தை கடன் வாங்கியிருந்தார். மத்திய, மாநில அரசுகளும் தினேஷ்குமாருக்கு எவ்வித  உதவியும் செய்யவில்லை.

இந்நிலையில், கடனை அடைக்க தந்தையுடன் சேர்ந்து தள்ளுவண்டியில் ‘குல்பி ஐஸ்’ விற்று வருகிறார் இதுகுறித்து தினேஷ்குமார் கூறுகையில், ‘‘தேசிய, சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் விளையாடியுள்ளேன். 17 தங்கம், ஒரு வெள்ளி, 5  வெண்கலம் வாங்கியுள்ளேன்.

சர்வதேச போட்டிகளில் விளையாட எனது தந்தை கடன் வாங்கினார். கடனை திருப்பி செலுத்துவதற்காக என்னுடைய தந்தையுடன்  சேர்ந்து ஐஸ் விற்கிறேன்.



கடந்த அரசும், தற்போதைய அரசும் எனக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. என்னுடைய கடனை அடைக்க அரசு உதவ வேண்டும்.

நான் ஒரு சிறந்த வீரர்.   எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அரசு எனக்கு உதவி செய்யும் பட்சத்தில், சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கும் வகையில்  இளைஞர்களை உருவாக்குவேன்’’ என்றார்.     
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான  உதவிகளை வழங்கி, சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க செய்கின்றன. இந்தியாவில் திறமையான வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு போதிய உதவிகள் செய்யாமல்  தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



.

மூலக்கதை