இந்தோனேசிய விபத்துக்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறு பலியான 189 பேரில் 20 அமைச்சக அதிகாரிகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தோனேசிய விபத்துக்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறு பலியான 189 பேரில் 20 அமைச்சக அதிகாரிகள்

* 24 பயணிகளின் சிதறிய சடலங்கள், உடைமைகள் மீட்பு
* 136 உறவினரின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு

ஜகார்தா: இந்தோனேசியா விமான விபத்துக்கான காரணம் தொழில்நுட்ப கோளாறு என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில், 24 பயணிகளின்  சிதறிய சடலங்கள் மற்றும் உடைமைகள் மீட்கப்பட்டுள்ளன.

பலியான 189 பேரில் 20 பேர் பினாங்கின் அமைச்சக அதிகாரிகள் என்று தெரியவந்துள்ளது.   இறந்தவர்களை அடையாளம் காண வசதியாக, அவர்களின் உறவினர்கள் 132 பேர் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை கொடுத்துள்ளனர். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஜேடி610 என்ற விமானம் நேற்று காலை 6. 20  மணிக்கு புறப்பட்டது.

விமானம் வானில் பறந்த 13 நிமிடங்களுக்குப் பிறகு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை முழுமையாக இழந்தது. இந்தியப் பெருங்கடல்  பகுதியின் வட கடலில் உள்ள தன்ஜூங் பிரியோக் என்ற இடத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், கடலின் 30 முதல் 40 மீட்டர் ஆழத்துக்குள் விழுந்து  கிடந்தது.



இதுகுறித்து, லயன்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது சயாகி கூறுகையில், “விமானத்தில் பயணித் தவர்களில் யாரும்  உயிருடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. இப்போது வரை விமானத்தில் இருந்து எந்த விதமான சமிக்ஞையும் கிடைக்கவில்லை.

நம்பிக்கை யோடு தேடி  வருகிறோம். ஆழ்கடலில் நீச்சல் தெரிந்த வர்கள் மூலமும் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன’’ என்றார். இதுகுறித்து, இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு ஏஜென்சி இயக்குனர் பாம்பாங் சூர்யோ அஜி கூறுகையில், ‘‘24 பைகளில் சிதறிய விமான  பாகங்கள், சடலங்கள், உடைமைகள் ஆகியவற்றை சேகரித்துள்ளோம்.

விமானத்தில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 189 பயணிகளும் உயிரிழந்தது உறுதி  செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் இந்தோனேசிய கடற்படை யைச் சேர்ந்த கேஆர்ஐ ரிஜெல்-933 என்ற கப்பல் ஈடுபட்டுள்ளது.

இதில், 675 போலீஸ் மற்றும்  ஆழ்கடல் நீச்சல் வீர்கள் கடலில் இறங்கி தேடி வருகின்றனர். விமான விபத்து தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை நடத்தி வருகிறது.



இதற்கிடையே, விபத்து நடந்தபோது விமானி அறையில் நடந்த உரையாடல்கள் விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டியில் (பிளாக் பாக்ஸ்) பதிவாகி இருக்கும்  என்பதால், அதை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டெல்லியின் மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த 31 வயதான பாவ்யே சுனேஜா என்பவர், விமானத்தின் பைலட் என்பது தெரியவந்துள்ளது. இவர், தீபாவளிக்கு  ஊருக்கு வர இருந்த நிலையில், தற்போது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை  விமானம் இழந்ததால், தொழில்நுட்பக் கோளாறால் விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, இன்று காலை செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, தேசிய துணை போலீஸ் தலைவர் ஆரி டோனோ சுக்குமேன்டோ கூறியதாவது: விமான விபத்து மீட்புக் குழுவில் 651 போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், 15 தடயவியல் அதிகாரிகள் குழு, அங்கிருந்து கிடைக்கும்  சிதறிய சடலங்கள், உடைமைகள், விமான உதிரி பாகங்களை மீட்டு ஆய்வு நடத்தி வருகிறது.

ஒரு குழந்தை உட்பட 24 பேரின் சிதறிய சடலங்கள், உடைமைகள்  மீட்கப்பட்டுள்ளன. இவை, பெர்லின்காவ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில்  இறந்தவர்களின் உறவினர்களில், 151 பேர் டிஎன்ஏ மாதிரிகள் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அவர்களில், 136 பயணிகளிடம் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாக கொண்டு, இறந்தவர்களின் அடையாளம் காணப்படும். வார இறுதி  விடுமுறை நாட்கள் என்பதால், பினாங்கை சேர்ந்த 20 அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஜகார்தா சென்றுவிட்டு விபத்துக்குள்ளான  விமானத்தில் பயணித்துள்ளனர்.


இவர்களும் தற்போது இறந்துவிட்டது உறுதியாகி உள்ளது.   போயிங் 737 - மேக்ஸ் ஜெட் வகையைச் சேர்ந்த இந்த விமானம் கடந்த ஆண்டுதான் பயன்பாட்டுக்கு  வந்தது. அறிமுகமாகி ஒரு ஆண்டிலேயே விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதால் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருந்திருக்கலாம் என்ற  கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை