ஏடிபி டூர் டென்னிஸ் பைனலில் கோபிலை வீழ்த்தினார் பெடரர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏடிபி டூர் டென்னிஸ் பைனலில் கோபிலை வீழ்த்தினார் பெடரர்

பேசல்(ஸ்விட்சர்லாந்து):  ஸ்விட்சர்லாந்தில் நடந்த ஏடிபி டூர் டென்னிஸ் பைனலில் ருமேனியாவின் மவுரிஸ் கோபிலை வீழ்த்தி, ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் இது பெடரரின் 99வது கோப்பை என்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஸ்விட்சர்லாந்தின் பேசில் நகரத்தில் உள்ள இண்டோர் ஸ்டேடியத்தில் கடந்த வாரம் ஏடிபி டூர் டென்னிஸ் போட்டிகள் துவங்கின.

சொந்த மண்ணில் முதல் சுற்றில் இருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஜர் பெடரர், நேற்று முன்தினம் நடந்த செமி பைனலில், ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, 14வது முறையாக ஏடிபி டூரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நேற்று இரவு நடந்த பைனலில் தரவரிசையில் 93வது இடத்தில் உள்ள ருமேனியாவின் மவுரிஸ் கோபிலை, பெடரர் எதிர்கொண்டார். முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் டை-பிரேக்கரில் போராடி வென்ற பெடரர், 2ம் செட்டை எளிதாக 6-4 என்ற கணக்கில் வென்று, கோப்பையை தட்டிச் சென்றார்.

12 ஆயிரத்துக்கும் மேல் கூடியிருந்த பார்வையாளர்கள், அவ்வப்போது கரகோஷம் எழுப்பி, பெடரருக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஏடிபி போட்டிகளில் இது பெடரருக்கு 99வது கோப்பை என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். இந்த ஏடிபி டூர் டென்னிஸில் இது அவரது 9வது சாம்பியன் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

37 வயதாகும் பெடரர், இந்த ஆண்டிலேயே 100வது கோப்பை என்ற சாதனையை எட்டி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். ஏடிபி போட்டிகளில் அமெரிக்காவின் ஜிம்மி கார்னர்ஸ், 109 பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ெபடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

அவருடன் ஒப்பிடுகையில் கோபில், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சில போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார்.   பிரெஞ்ச் ஓபன், யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் சுற்றில் தோல்வியடைந்த கோபில், ஆஸி. ஓபனில் மட்டும் கடந்த 2015ம் ஆண்டு முதல் சுற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெடரர் கூறுகையில், ‘‘இது எனக்கு அற்புதமான வாரம்.

இந்த பட்டத்தையும் வென்று விட வேண்டும் என்பது என்னுடைய கனவு. கோபில் அற்புதமாக ஆடினார்.

முதல் செட்டில் அவருக்கு கிடைத்த பிரேக் பாயின்ட்டை, நெட்டில் அடித்து வீணாக்கி விட்டார். டை-பிரேக்கரில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது’’ என்று கூறினார்.



.

மூலக்கதை