மும்பையில் இன்று 4வது ஒருநாள் போட்டி வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா?: எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மும்பையில் இன்று 4வது ஒருநாள் போட்டி வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா?: எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 4வது போட்டி, இன்று மும்பையில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் உள்ள நிலையில், புனேயில் கோட்டை விட்ட இந்திய அணி, இன்று வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் இத்தொடரில் 3 சதங்கள் அடித்து அபார ஃபார்மில் உள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, இன்று 4வது சதம் அடித்து, இலங்கை வீரர் சங்ககாராவின் சாதனையை சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி, கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்த இன்று ஆடும் 11 வீரர்களில் கேதார் ஜாதவ் இடம் பெறுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4வது ஒருநாள் போட்டி, மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1. 30க்கு தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் உள்ளன. விசாகபட்டினத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டி ‘டை’யில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடரை வெல்லும் முனைப்பில் இன்று இரு அணிகளும் மும்பையில் களமிறங்குகின்றன.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள், சொதப்பி வரும் நிலையில் இன்றைய போட்டியில் கேதார் ஜாதவ் களமிறங்குவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மனீஷ் பாண்டேவுக்கும் இன்று வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இத்தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சதம் அடித்து, ஒருநாள் போட்டிகளில் வரிசையாக 3 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

3 போட்டிகளில் 404 ரன்கள், சராசரி 202 ரன்கள் என அபார திறனுடன் இன்று களமிறங்கும் கோஹ்லி, 4வது சதத்தை அடித்து, இலங்கை வீரர் சங்ககாராவின் உலக சாதனையை சமன் செய்வாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. புனேயில் அவர் 11 பந்துகளில் 7 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது, அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து நேற்று டோனி, பிராபோர்ன் மைதானத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். உள்ளூர் வீரர்களை பந்துவீச வைத்து பேட் செய்த டோனி,  பேட்டிங் பயிற்சி செய்ததுடன் துணை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரின் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டார்.

தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வரும் அவர், ஆஸி. டி20 தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித், ராயுடு, ராகுல், பாண்டே, ஜடேஜா ஆகியோரும் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சியை தவிர்த்து விட்டு ஓய்வெடுத்தனர்.

3வது போட்டி புனேயில் முடிவடைந்ததும், இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் வீரர்கள் தனித்தனி சொகுசு பஸ்களில் மும்பைக்கு பயணமானார்கள்.

இப்போட்டி வழக்கமாக நடைபெறும் வான்கடே மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரபிக்கடலின் மிக அருகில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்து கட்டுவதால், இன்றைய போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

.

மூலக்கதை