இந்தோனேசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது: 188 பயணிகள் பலி?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தோனேசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது: 188 பயணிகள் பலி?

விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை
பயணிகள், கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம், இன்று காலை ஜாவா கடலில் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில், 188 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து, உள்ளூர் நேரப்படி இன்று காலை 6. 33 மணிக்கு பங்க்கால் பினாங் தீவுக்கு 188 பேருடன் புறப்பட்டுச்சென்ற, லைன் ஏர் பிளைட் என்ற பயணிகள் விமானம், புறப்பட்ட 13வது நிமிடத்தில் இருந்து விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

மாயமான இந்த விமானம், லயன் ஏர் பிளைட் நிறுவனத்துக்கு சொந்தமானது. சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், மாயமான விமானத்தை ஜாவா கடல் பகுதியில் தேடும் பணியில் தகவல் கிடைத்த சில நிமிடங்களில் முடுக்கி விட்டனர்.

கடந்த 2017ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட லைன் ஏர் பிளைட் - ஜெடி610 விமானம், போயிங் 737 மேக்ஸ் 8 மாடல் வகையை சேர்ந்தது.

‘‘தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானத்தை தேடி வருகிறோம். மேலும், விமானம் விபத்துக்குள்ளானது உறுதி ெசய்யப்பட்டுள்ளது’’ என்று இந்தோனேசிய விமான நிலைய செய்தி தொடர்பாளர் யூசுப் லாடிட் தெரிவித்தார்.

லைன் ஏர் பிளைட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி எட்வார்ட் சிரைட் கூறுகையில், ‘‘தற்போதைக்கு எந்த தகவலும் தெரிவிக்க முடியாது. விமானத்தை தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார்.

ஜகார்த்தா நகரில் இருந்து சென்ற விமானம், பங்க்கால் தீவுக்கு புறப்பட்டுச் சென்ற போது, ஜாவா கடல் மார்க்கத்தில் மாயமானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

 அதன்படி, பிளைட் ரேடாரில் இருந்து, ஆரம்ப விமான கண்காணிப்புத் தரவின்படி, விமானம்  சுமார் 5,000 அடி (1,524 மீ) உயரத்தில் பறந்த நிலையில், இறுதியாக ஜாவா கடலை  நோக்கி வீழ்ந்துள்ளது. இது, கடைசியாக 3,650 அடி (1,113 மீ) உயரத்தில், 345  ‘நாட்ஸ்’ வேகத்தில் சென்றுள்ளது.

இந்தோனேசியாவின் கடலோரப்பகுதியின் வடக்கே  சுமார் 15 கி. மீ தொலைவில் இருந்து, கடைசி பிளைட் ராடார் மூலம் தகவல்கள்  கிடைத்துள்ளன. ஜாவா தீவின் கடலில் விழுந்து விமானம் நொறுங்கி உள்ளதால்,  விமானத்தில் பயணம் செய்ய 188 பேரின் நிலை குறித்து உறுதியான தகவல்கள்  கூறமுடியாத நிலையில், அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் 3 குழந்தைகள், 2 விமானிகள், 5 விமான பணியாளர்கள், 178 பயணிகள் என, 188 பேர் பயணம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளளது.

இந்தோனேசியா அரசு நிர்வாகமும்,  உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை இன்னும் வெளியிடவில்லை.

விமானத்தின் நொறுங்கிய பாகங்கள், ஜாவா கடலில் மிதப்பதால் அந்த இடத்திற்கு இரண்டு கப்பல்கள், ஒரு சரக்கு கப்பல்,  ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றில் மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர்.
அவர்கள், விமானத்தின் உதிரிபாகங்கள் சிலவற்றை கைப்பற்றி உள்ளனர்.

கடலில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதால், கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், 188 பேரில் எவரையும் மீட்கவில்லை.

கடலில் மூழ்கியுள்ள அவர்கள் குறித்த தகவலும் வெளியாகவில்லை. இதனால், ஜகார்த்தா விமான நிலையத்தில், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள், எந்த உறுதியான தகவலும் கிடைக்காத நிலையில் கதறி அழுதபடி இருந்தனர்.

விமான விபத்துக்கான காரணம் குறித்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அந்நாட்டின் சிவில் விமானத் துறை அமைச்சக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கருப்பு பெட்டி எங்கே?; விபத்துக்குள்ளான விமானம் குறித்து முழு விபரங்களையும் அறிவதற்கு உதவியாக, கருப்புப் பெட்டி எனப்படும் விமானத்தின் விவரங்கள் பதிவு சாதனம், விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்படும்.

இந்த பெட்டியின்மீது பல அடுக்குகளாக எக்கு தகடுகள் சுற்றப்பட்டு இருக்கும். அதனால், விமானம் மோதினாலோ, தீ பிடித்தாலோ, தட்ப வெட்ப நிலையில் அதிகபட்ச மாற்றம் ஏற்பட்டாலோ, கடலில் மூழ்கினாலோ எந்த பாதிப்பும் கருப்புப் பெட்டிக்கு ஏற்படாது.

இதில் விமானம் பறந்த உயரம், வேகம், நேர்குத்து இயக்கம், விமானத்தின் இடம் என விமானத்தை பற்றிய உண்மையான நிலவரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும்.

எனவே, விபத்து நடந்த போது நிலவிய சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இதுதவிர கருப்புப் பெட்டியின் மற்றொரு பிரிவில் ஒலிப் பதிவு கருவியும் உண்டு. விமானத்தில் உள்ள பைலட்டுகள் அறையில் நடந்த உரையாடல், அங்கு ஏற்படும் ஒலிகள், பைலட்டுகளின் குரல்கள், இஞ்ஜினின் இரைச்சல் என அனைத்துவித சப்தங்களும் அதில் பதிவாகிவிடும்.

இதன் மூலமாக விபத்து நடந்த போது பரிமாறப் பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம். தற்போது இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை, நீர்மூழ்கி கப்பல் மூலம் மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.



2015ல் 54 பேர் பலி: கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வர்த்தக ரீதியிலான பயணிகள் விமானம்,  இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட போது, பாப்பூ என்ற இடத்தில் மோசமான  வானிலையால் விபத்தில் சிக்கியது. இதில், 54 பயணிகள் உயிரிழந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வான் பாதுகாப்பு பட்டியலிலிருந்து லயன் ஏர் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை