பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி: வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமாக ஹாங்காங்கில் உள்ள சொத்துகள் முடக்கம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

பஞ்சாப் நேசனல் வங்கி மோசடியில்வைர வியாபாரி நீரவ் மோடிக்குச் சொந்தமாக ஹாங்காங்கில் உள்ள சொத்துகளை அமலாக்க துறை முடக்கி உள்ளது.  

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல்  வங்கியில் 13 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தார்.

இது குறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர், தனது உறவினர் மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோர் வெளிநாடு தப்பி சென்றனர். மோசடியில்  ஈடுபட்ட தொழிலதிபர் நீரவ் மோடி உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இருவரையும் இந்தியா  கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்  நீரவ் மோடிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன.  சமீபத்தில் இவருடைய வெளிநாட்டு சொத்துகள் உட்பட 637 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியது.

இந்த நிலையில், நீரவ் மோடிக்கு ஹாங்காங்கில் உள்ள 26 ஏற்றுமதி நிறுவனங்களை அமலாக்கத்  துறை முடக்கி உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.255 கோடி. இது தொடர்பான நீதிமன்ற உத்தரவு விரைவில் ஹாங்காங் அரசிற்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பஞ்சாப் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக  நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷியிடம் இருந்து இதுவரை 4,744 கோடி  சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. 

மூலக்கதை