பிளாஸ்டிக்கை ஒழிக்க இந்தோனேஷியாவில் புது முயற்சி- பிளாஸ்டிக் கொடுத்தால் பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

பிளாஸ்டிக் பொருட்களைக் கொடுத்து, பஸ்சில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என இந்தோனேஷிய அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும் என நம்புகிறது.

பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்யவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும் இந்தோனேஷியா அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஆயிரக்கணக்கான தீவுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே கடல் மாசு அதிகம் உள்ள நாடாக இந்தோனேஷியா கண்டறியப்பட்டு உள்ளது. இதனையடுத்து கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற இந்தோனேஷியா அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அபராதம், மறு சுழற்சி நடவடிக்கை என பிளாஸ்டிக்கை ஒழிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

சாதகமான விளைவுகள் ஏதும் ஏற்படாததால் புதிய முயற்சியாக, பிளாஸ்டிக் குப்பைகள் வீசுவதை தவிர்க்கும் வகையில் இலவச பேருந்து பயண திட்டத்தை இந்தோனேஷியா அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின் படி பிளாஸ்டிக் பாட்டில்களை ஒப்படைத்து விட்டு டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் இலவசமாக பயணம் செல்லலாம். இந்த திட்டம் முதன்முதலாக சுராபையா நகரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பேருந்தில் செல்ல விரும்பும் பயணிகள் மறு சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி நகர பேருந்தில் பயணம் செல்லலாம். 2 மணி நேர பேருந்து பயணத்திற்கு 10 பிளாஸ்டிக் பாட்டில்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதற்கு குறைவான தூர பயணத்திற்கு 5 பாட்டில்களை கொடுக்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 250 கிலோ பிளாஸ்டிக் பாட்டில்கள் பயணிகளிடம் இருந்து பெறப்பட்டால் மாதத்திற்கு சுமார் 7.5 டன் வரை சேகரிக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த நூதன நடவடிக்கையால் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன் மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்த முடியும் என அரசு எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை