ஆப்கன் எல்லைப்பகுதியில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 ‘‘ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார். 

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அனைத்து தீவிரவாத இயக்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டும், அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி இந்த ஆண்டு தொடக்கத்தில், அந்நாட்டுக்கு வழங்கி வந்த பல ஆயிரம் கோடி நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது.  புதிய பிரதமர் இம்ரான்கான் பொறுப்பேற்றதை அடுத்து கடந்த செப்டம்பரில் அமெரிக்கா  வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பாகிஸ்தான் சென்று இம்ரான்கானை  சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், வாஷிங்டனில்  பாம்பியோ அளித்த பேட்டியில் கூறியதாவது:

 ‘‘தெற்கு மத்திய ஆசியாவை பொறுத்தவரையில் அமெரிக்காவின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் தனது மேற்கு எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்கக் கூடாது என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. 

பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து தீவிரவாத இயக்கங்களையும் அந்நாடு தடை செய்ய வேண்டும். இந்த விஷயத்தை இதற்கு மேல் தெளிவுபடுத்த முடியாது. இது குறித்து பாகிஸ்தான் கவலைப்படவில்லை என்றால் அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

அனைவரும் விரும்பும் இடத்திற்கு நாங்கள் செல்ல முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஆப்கானிஸ்தானில் சமரசம் தேவை என அனைவரும் விரும்புகின்றனர். அதை அடைய வேண்டுமென்றால் நீங்கள் தலிபான்கள், ஹக்கானி மற்றும் பாகிஸ்தானில் உள்ள பிற தீவிரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருக்கக் கூடாது."

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை