மத்தியப்பிரதேச சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தில் மேஜிக் நிபுணர்களை ஈடுபடுத்த திட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மத்தியப்பிரதேச சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தில் மேஜிக் நிபுணர்களை ஈடுபடுத்த திட்டம்!

மத்திய பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தில் மேஜிக் நிபுணர்களை ஈடுபடுத்த பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன.

மத்திய பிரதேசத்தில் கடந்த மூன்று முறை அதாவது 15 ஆண்டுகளாக பா.ஜ.க.ஆட்சி நடைபெற்று வருகிறது. 4-வது முறையாகவும் ஆட்சியைத் தக்கவைக்க திட்டமிட்டு, அதற்கென பல்வேறு வியூகங்களை பா.ஜ.க.வகுத்து வருகிறது. இதற்கிடையில், காங்கிரசும் அங்கு ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது. 

கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், மக்களை கவரும் வகையில் தனது தேர்தல் பிரசாரத்தில் மேஜிக் நிபுணர்களை களமிறக்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது. 

இது குறித்து மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பு நிர்வாகி ரஜ்னிஷ் அகர்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது:

 “மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்திலும், கட்சி விளம்பரத்திற்காகவும் மேஜிக் நிபுணர்களை வாடகைக்கு அமர்த்த திட்டமிட்டு உள்ளோம். மேஜிக் நிபுணர்கள் கிராமம், நகரங்களின் சந்தைப் பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் வாக்காளர்களை கவர மேஜிக் காட்சிகளை நடத்துவார்கள். 

கடந்த 1993-2003க்கு இடைபட்ட 10 ஆண்டுகளில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இருந்த மோசமான சாலைகள், மின் விநியோகம் மற்றும் அடிப்படை வசதிகளின் மோசமான நிலை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும்” 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை