நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு: முதல்வர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

தினகரன்  தினகரன்
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு: முதல்வர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

டெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சாலைப்பணி டெண்டரை உறவினருக்கு ஒதுக்கியதாக முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. முன்னதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியதாக ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக போலீசார் விசாரிப்பது முறையாக இருக்காது என்று கூறி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை