‘ராஜாளி’ கோஹ்லி, ரோகித் செம ‘ஜாலி’: இந்தியா ‘மின்னல்’ வெற்றி | அக்டோபர் 21, 2018

தினமலர்  தினமலர்
‘ராஜாளி’ கோஹ்லி, ரோகித் செம ‘ஜாலி’: இந்தியா ‘மின்னல்’ வெற்றி | அக்டோபர் 21, 2018

கவுகாத்தி: முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை விரட்டி விரட்டி அடித்த கேப்டன் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா சதம் கடந்தனர். இவர்களது அபார ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ‘மின்னல்’ வேக வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நேற்று, அசாம் மாநிலம் கவுகாத்தியில் முதல் போட்டி நடந்தது. இந்திய அணியில் ரிஷாப் பன்ட் அறிமுகமாகினார். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பாவெல் அரைசதம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அறிமுக வீரர் சந்தர்பால் ஹேம்ராஜ் (9) ஏமாற்றினார். சகால் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பாவெல்(51), ஒருநாள் அரங்கில் தனது 9வது அரைசதமடித்தார்.

ஹெட்மயர் அபாரம்

சகால் ‘சுழலில்’ மார்லன் சாமுவேல்ஸ் (0) சிக்கினார். ஷாய் ஹோப் (32) ஆறுதல் தந்தார். ரவிந்திர ஜடேஜா வீசிய 21, 23வது ஓவரில் தலா ஒரு சிக்சர் விளாசிய ஷிம்ரான் ஹெட்மயர், ஷமி வீசிய 24வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். ஜடேஜா ‘சுழலில்’ ராவ்மன் பாவெல் (22) போல்டானார். ஷமி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஹெட்மயர், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். இவர், 106 ரன் (78 பந்து, 6 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்திருந்த போது ஜடேஜாவிடம் சரணடைந்தார். கேப்டன் ஹோல்டர் (38) ஓரளவு கைகொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. பிஷூ (22), ரோச் (26) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சகால் 3, ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (4) ஏமாற்றினார்.  பின் இணைந்த ரோகித் சர்மா, கேப்டன் விராத் கோஹ்லி ஜோடி அசத்தியது.  ராஜாளி கழுகு போன்ற இவர்களது வலிமையான பிடியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் தப்ப முடியவில்லை. ஒருபுறம் கோஹ்லி பவுண்டரிகளாக விளாசினார். மறுபுறம் ரோகித் சிக்சர் மழை பொழிந்தார். கீமர் ரோச் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோஹ்லி, ஒருநாள் அரங்கில் தனது 36வது சதத்தை பதிவு செய்தார்.

ரோகித் அசத்தல்

ஆஷ்லே நர்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரோகித் ஒருநாள் அரங்கில் தனது 20வது சதத்தை பூர்த்தி செய்தார். இவர்களை பிரிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 246 ரன் சேர்த்த போது பிஷூ ‘சுழலில்’ கோஹ்லி (140) சிக்கினார். தாமஸ் வீசிய 42வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த ரோகித், சந்தர்பால் ஹேம்ராஜ் பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 42.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் (152), அம்பதி ராயுடு (22) அவுட்டாகாமல் இருந்தனர்.  தொடரில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் விருதை கோஹ்லி வென்றார். இரண்டாவது போட்டி வரும் 24ல் விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.

கவுகாத்தி அறிமுகம்

நேற்று, அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் (அசாம் கிரிக்கெட் சங்க மைதானம்) முதன்முறையாக ஒருநாள் போட்டி நடந்தது. இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டி நடத்திய 46வது இந்திய மைதானம் என்ற பெருமை பெற்றது.

இதற்கு முன் இங்கு, கடந்த ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டி முதன்முறையாக நடத்தப்பட்டது.

ரன் வள்ளல் ஷமி

வேகப்பந்துவீச்சில் ஏமாற்றிய முகமது ஷமி, 10 ஓவரில் 2 விக்கெட் மட்டும் கைப்பற்றி 81 ரன் வழங்கினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன் வழங்கிய இந்திய பவுலரானார். இதற்கு முன், கடந்த 2014ல் தர்மசாலாவில் நடந்த போட்டியில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 9 ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றி 80 ரன் வழங்கியிருந்தது அதிகபட்சமாக இருந்தது.

மூலக்கதை