சச்சின் சாதனை சமன் | அக்டோபர் 21, 2018

தினமலர்  தினமலர்
சச்சின் சாதனை சமன் | அக்டோபர் 21, 2018

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 2000 ரன்களை கடந்தார். இதுவரை 2098 ரன்கள் (டெஸ்ட்: 1063 + ஒருநாள்: 889 + சர்வதேச ‘டுவென்டி–20’: 146 ரன்கள்) குவித்துள்ளார். இவர், தொடர்ந்து 3வது ஆண்டாக (2016ல் 2595 ரன், 2017ல் 2818 ரன்) இம்மைல்கல்லை எட்டினார்.

இதன்மூலம் தொடர்ந்து மூன்று ஆண்டில் 2000 அல்லது அதற்கு மேல் சர்வதேச ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் (1996–98), ஆஸ்திரேலியாவின் மாத்யூ ஹைடன் (2002–04), இங்கிலாந்தின் ஜோ ரூட் (2015–17) ஆகியோருடன் இணைந்தார்.

* தவிர கோஹ்லி 5வது முறையாக ஒரு ஆண்டில் 2000 அல்லது அதற்கு மேல் சர்வதேச ரன் எடுத்துள்ளார். இதன்மூலம் அதிகமுறை இம்மைல்கல்லை எட்டிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை இந்தியாவின் சச்சின், இலங்கையின் மகிளா ஜெயவர்தனா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் இலங்கையின் சங்ககரா (6 முறை) உள்ளார்.

சூப்பர் ஜோடி

இந்தியாவின் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி 15வது முறையாக ஒருநாள் போட்டியில் 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்தது. இதன் மூலம் ஒருநாள் போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக முறை 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த ஜோடிகளுக்கான பட்டியிலில் 4வது இடத்தை வெஸ்ட் இண்டீசின் கிரீனிட்ஜ் – ஹெய்ன்ஸ் (15 முறை), இலங்கையின் சங்ககரா–ஜெயவர்தனா (15) ஜோடியுடன் பகிர்ந்து கொண்டது. முதலிடத்தில் இந்தியாவின் சச்சின்–கங்குலி ஜோடி (26 முறை) உள்ளது.

36

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ஒருநாள் அரங்கில் தனது 36வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக சதமடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் சச்சின் (49 சதம்) உள்ளார்.

* இது, ‘சேஸ்’ செய்த போது இவர் அடித்த 22வது சதம்.

* சொந்த மண்ணில் இவரது 15வது சதம்.

* கேப்டனாக 14வது சதம். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்த கேப்டன் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்சை (13 சதம்) முந்தி 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (22 சதம்) உள்ளார்.

* வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5வது சதம். இதன்மூலம் சச்சின் (4 சதம்) சாதனையை முறியடித்தார்.

246

கோஹ்லி, ரோகித் சர்மா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் 2வது பேட்டிங் செய்த போது எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதற்கு முன், 2009ல் கோல்கட்டாவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் காம்பிர்–கோஹ்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 224 ரன் சேர்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

* தவிர, 2வது பேட்டிங் செய்த போது 2வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த சர்வதேச ஜோடிகளுக்கான பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் வாட்சன்–பாண்டிங் ஜோடி (252* ரன், எதிர்: இங்கிலாந்து, 2009, இடம்: செஞ்சூரியன்) உள்ளது.

* இரண்டாவது பேட்டிங் செய்த போது 2வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதற்கு முன், கடந்த 2016ல் கான்பெராவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தவான்–கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 212 ரன் சேர்த்தது அதிகபட்சமாக இருந்தது.

4

ஒருநாள் அரங்கில் 4வது முறையாக, ஒரு போட்டியில் இந்தியாவின் கோஹ்லி, ரோகித் சர்மா இருவரும் சதமடித்தனர். இப்படி ஒரு போட்டியில் அதிகமுறை சதமடித்த ஜோடிகளுக்கான பட்டியலில் 2வது இடத்தை இந்தியாவின் சச்சின்–கங்குலி (4 முறை), தென் ஆப்ரிக்காவின் ஆம்லா–குயின்டன் டி காக் (4) ஜோடிகளுடன் பகிர்ந்து கொண்டனர். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ்–ஆம்லா (5 முறை) உள்ளது.

60

இந்தியாவின் விராத் கோஹ்லி, சர்வதேச அரங்கில் 60 சதத்தை பதிவு செய்தார். இவர், டெஸ்டில் 24, ஒருநாள் போட்டியில் 36 சதமடித்துள்ளார். இந்த இலக்கை எட்ட இவருக்கு 386 இன்னிங்ஸ் (டெஸ்ட்: 124 + ஒருநாள்: 204 + சர்வதேச ‘டுவென்டி–20’: 58 இன்னிங்ஸ்) தேவைப்பட்டது. இதன்மூலம் இவர், குறைந்த இன்னிங்சில் 60 சர்வதேச சதத்தை பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் சச்சினை (426 இன்னிங்ஸ்) முந்தி முதலிடம் பிடித்தார்.

ரிஷாப் ‘224’

இளம் வீரர் ரிஷாப் பன்ட், 21, சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான 224வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இவருக்கு, முன்னாள் கேப்டன் தோனி, ஒருநாள் போட்டிக்கான அறிமுக தொப்பியை வழங்கினார்.

சாமுவேல்ஸ் ‘200’

நேற்று, மார்லன் சாமுவேல்ஸ் தனது 200வது ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இதன்மூலம் இவர், 200 அல்லது அதற்கு மேல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 8வது வெஸ்ட் இண்டீஸ் வீரரானார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் லாரா அதிகபட்சமாக 295 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

* இப்போட்டியில் சாமுவேல்ஸ் ‘டக்–அவுட்’ ஆனார். இதன்மூலம் 200வது ஒருநாள் போட்டியில் ‘டக்–அவுட்’ ஆன 8வது சர்வதேச வீரரானார்.

ஏற்கனவே இலங்கையின் ரோஷன் மகாணமா, வெஸ்ட் இண்டீசின் லாரா, நியூசிலாந்தின் கிறிஸ் கெய்ன்ஸ், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட், பாகிஸ்தானின் அப்துல் ரசாக், சோயப் மாலிக், இந்தியாவின் ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்களது 200வது போட்டியில் ‘டக்’ அவுட்டாகினர்.

74

அபாரமாக ஆடிய ஹெட்மயர் 74 பந்தில் சதமடித்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் குறைந்தபந்தில் சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்தார். முதலிடத்தை விவியன் ரிச்சர்ட்ஸ் (72 பந்து, இடம்: ஜாம்ஷெட்பூர், 1983), ரிகார்டோ பாவெல் (72 பந்து, இடம்: சிங்கப்பூர், 1999) பகிர்ந்து கொண்டுள்ளனர்.

322

பேட்டிங்கில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 4வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. கடந்த 1983ல் ஜாம்ஷெட்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 333 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக உள்ளது. அதன்பின் இரண்டு முறை (2002ல் அகமதாபாத், 2007ல் நாக்பூர்) தலா 324 ரன்கள் எடுத்திருந்தது.

மூலக்கதை