பாதுகாப்பு கருதி சபரிமலையிலிருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு

தினகரன்  தினகரன்
பாதுகாப்பு கருதி சபரிமலையிலிருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு

திருவனந்தபுரம் : சபரிமலையில் துலாம் மாத பூஜைக்காக திறக்கப்பட்ட நடை இன்று இரவுடன் அடைக்கப்பட உள்ளதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் இருந்து செய்தியாளர்கள் அனைவரும் வெளியே கேரள போலீஸ் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்ய பெண்களுக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த 17ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஆனால் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பராம்பரிய வழிபாட்டு கொள்கை காக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சபரிமலைக்கு வந்த 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கு கலவரம் நிலவியது. எனவே சபரிமலை, நிலக்கல் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை உத்தரவானது இன்று இரவு வரை நீடிக்கிறது. துலாம் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு இன்று 6வது நாளாகும் நிலையில், இன்று இரவு 10 மணிக்கு நடையடைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சபரிமலைக்கு 15 பெண்கள் வர உள்ளதாக தகவல் வெளியானதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாத சூழல் நிலவுகிறது. எனவே சபரிமலை மற்றும் பம்பையில் உள்ள பத்திரிக்கையாளர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை