சபரிமலை கோயில் நடை இன்று சாத்தப்படுகிறது: 6 நாட்கள் ஆகியும் இந்து அமைப்புகள் பெண்களை அனுமதிக்கவில்லை

தினகரன்  தினகரன்
சபரிமலை கோயில் நடை இன்று சாத்தப்படுகிறது: 6 நாட்கள் ஆகியும் இந்து அமைப்புகள் பெண்களை அனுமதிக்கவில்லை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று இரவு சாத்தப்படுகிறது. நடை திறந்து 6 நாட்கள் ஆகியும் கூட இளம்பெண்கள் கோயிலுக்கு சென்று வழிபட முடியவில்லை. நிறைவுநாள் என்பதால் இன்று பெண்கள் வழிபட கோயிலுக்குள் அதிகளவில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களை அனுமதிக்க முடியாது என்று இந்து அமைப்புகளும் உறுதியாக இருப்பதால் இன்றும் பதற்றம் நிலவுகிறது. முன்னதாக ஆந்திராவை சேர்ந்த மாதவி, டெல்லியை சேர்ந்த பெண் நிருபர் சுகாசினி ராஜ், ஐதராபாத்தை சேர்ந்த தனியார் டிவி பெண் நிருபர் கவிதா, எர்ணாகுளத்தை சேர்ந்த மாடல் அழகி ரெஹ்னா பாத்திமா, திருவனந்தபுரத்தை சேர்ந்த மேரி ஸ்வீட்டி, கொல்லத்தை சேர்ந்த மஞ்சு ஜோசப் ஆகியோர் சபரிமலை தரிசனத்திற்கு செல்ல முயற்சித்தனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இவர்கள் அனைவரும் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி சென்றனர்.இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 6 நாட்களாக 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சன்னிதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலைக்குள் செல்லும் அனைத்தும் வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று இந்து அமைப்புகளும் உறுதியாக இருப்பதால் சபரிமலையில் இன்றும் பதற்றமான சூழலே நிலவுகிறது.

மூலக்கதை