இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்

தினகரன்  தினகரன்
இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்

டெல்லி: இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் அக்டோபர் மாதம் 6-ம் தேதி தொடங்கிய இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அக்டோபர் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 3,997 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 47 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.போட்டியில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 13 பதக்கங்கள் வென்று 17-வது இடத்தை பிடித்தது. இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கங்கள் பெற்றது இதுவே முதன்முறையாகும். 2000-ம் ஆண்டு நடைபெற்ற அறிமுக தொடரில் இந்தியா 8 பதக்கங்கள் கைப்பற்றியிருந்தது. ஆனால் தங்கப் பதக்கம் கைப்பற்றவில்லை. 2014-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்தியா ஒட்டுமொத்தமாக 3 பதக்கங்கள் மட்டுமே கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.   இந்தத் தொடரில் ரஷ்யா 29 தங்கம், 18 வெள்ளி, 12 வெண்கலத்துடன் மொத்தம் 59 பதக்கங்கள் குவித்து பட்டியலில் முதலிடம் பிடித்தது. சீனா 18 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலத்துடன் 36 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தையும், ஜப்பான் 15 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலத்துடன் 39 பதக்கங்கள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தது. இந்நிலையில், இந்த போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர் வீராங்கனைகளை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அவர்களுடன் கலந்துரையாடி, வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் இளைஞர் ஒலிம்பிக் வீரர்கள் இடையேயான இந்த சந்திப்பின்போது, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தனும் உடனிருந்தார்.

மூலக்கதை