சபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்

தினகரன்  தினகரன்
சபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற மாடல் அழகி ரெஹானா பாத்திமா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதியளித்து சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பல பெண்கள் சபரிமலை சென்றபோது ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தினால் திரும்பி வந்தனர். இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் மாடல் அழகி ரெஹானா பாத்திமா எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த 19-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவையடுத்து ரெஹானாவை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்நிலையில் ரெஹானா தொடர்பாக கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜி ஏ.பூக்குன்ஜு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெயரை வைத்துகொண்டு ஐயப்பன் கோவிலுக்குள் தரிசனம் செய்ய முயன்றதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளையும், சடங்கு, சம்பிரதாயங்களையும் அவர் காயப்படுத்தி விட்டார் என்றும் எனவே, இஸ்லாம் மதத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். ரெஹானாவையும் அவரது மஹால்லாவில் குடும்பத்தாரையும் தள்ளிவைக்குமாறு எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாஅத்-ஐ அறிவுறுத்தி இருக்கிறோம்’என்று தெரிவித்துள்ளார்.யார் இந்த ரெஹானா பாத்திமா?: ரெஹானா ‘கிஸ் ஆப் லவ்’ என்ற முத்தப் போராட்டத்தை ஆதரித்ததன் மூலம் ஊடகங்களில் பிரபலமானார். மேலும், பெண்கள் தர்பூசணிப் பழம் விற்பவர்களைப்போல் தங்களது உடல் அழகை பகிரங்கமாக வெளிகாட்ட விரும்புகின்றனர் என்று ஒருவர் விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிர்வாணக் கோலத்தில் தர்பூசணி பழத்தின் வெட்டிய பாகத்தால் தனது மார்பழகை மறைத்தபடி படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார் ரெஹானா பாத்திமா.

மூலக்கதை