சவுதி பத்திரிகையாளர் கொலை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மழுப்பல்

தினமலர்  தினமலர்
சவுதி பத்திரிகையாளர் கொலை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மழுப்பல்

வாஷிங்டன்: ''பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில், சவுதி அரேபியா தெரிவித்துள்ள விளக்கத்தில் திருப்தில்லை. அதே நேரத்தில், அந்த நாட்டுடன் செய்துள்ள ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் விரும்பவில்லை,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். வளைகுடா நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்த, பிரபல பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, 59, அமெரிக்காவின், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தார்.சவுதி அரேபிய அரசுக்கு எதிராகவும், பட்டத்துக்கு இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராகவும் எழுதி வந்தார்.இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள, சவுதி அரேபியா தூதரகத்துக்கு சென்ற அவர், மாயமானார். இரண்டு வாரங்களாக, அவரது நிலை குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்து வந்த சவுதி அரேபிய அரசு, நேற்று முன்தினம் புது விளக்கத்தை அளித்தது.'இஸ்தான்புல் தூதரகத்தில் சந்திக்கச் சென்ற நபருடன் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பில் முடிந்து, அதில் கஷோகி கொல்லப்பட்டார்' என, சவுதி அரேபியா விளக்கம் அளித்தது. ஆனால், இதை ஏற்க பல நாடுகள் மறுத்துள்ளன. திட்டமிட்டு கொலை நடந்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி வருகின்றன.இந்நிலையில், இது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:பத்திரிகையாளர் கஷோகி குறித்து, சவுதி அரேபியா கூறியுள்ள கருத்தில் திருப்தியில்லை. இருப்பினும், 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக சவுதி கூறியுள்ளது. அதனால், விசாரணைக்குப் பின்பே, இதில் முழு உண்மை தெரியவரும். இதற்காக, சவுதி அரேபியா மீது பொருளாதார தடை விதிக்க முடியும். ஆனால், அதை நான் விரும்பவில்லை. தற்போது நடவடிக்கை எடுத்தால், அதனால், பாதிப்பு அமெரிக்காவுக்கே. சவுதியுடன், 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ ஒப்பந்தம் உள்பட, 32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்துள்ளோம்.சவுதி அரேபியா மீது பொருளாதார தடை விதித்தால், அவர்களை விட, நமக்கே அதிக பாதிப்பு ஏற்படும். வேலை வாய்ப்பு பாதிப்பு ஏற்படும். இருப்பினும், இது குறித்து, பார்லிமென்ட் முடிவு எடுக்கும். ஆனால், பொருளாதார தடை விதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.சவுதி அரேபியா, நமக்கு மிகவும் நெருங்கிய, நட்பு நாடு. அதனால், பத்திரிகையாளர் விவகாரத்தில் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஈரானில் மக்கள் கொல்லப்படுகின்றனர்; அங்குள்ள பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில், இது பொருளாதார தடை விதிக்க வேண்டிய குற்றமாக தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்க அதிபரின் இந்தப் பேச்சுக்கு, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள், சவுதி அரேபியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
துருக்கி எதிர்ப்புபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது குறித்து, துருக்கி அரசு கூறியுள்ளதாவது:அதிகாரிகளுடன் ஏற்பட்ட கைகலப்பில், பத்திரிகையாளர் கஷோகி உயிரிழந்ததாகக் கூறியுள்ளதை ஏற்க முடியாது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்; மூடி மறைக்கும் செய்கைகளை ஏற்க மாட்டோம். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்த விவகாரத்தில் நடந்த உண்மைகளை தெரிவிக்க வேண்டும் என, துருக்கியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் அரசை வலியுறுத்தி உள்ளன.

மூலக்கதை