61 பேர் பலியான பஞ்சாப் ரயில் விபத்து குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
61 பேர் பலியான பஞ்சாப் ரயில் விபத்து குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

* டிரைவர் மீது எந்த தவறும் இல்லை * மத்திய இணை அமைச்சர் சின்ஹா திட்டவட்டம்அமிர்தசரஸ்: அமிர்தசரஸ் அருகே 61 பேர் பலியான கோர ரயில் விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய ரயில் டிரைவர் மீது தவறில்லை என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். தசரா விழாவை முன்னிட்டு, வட மாநிலங்களில் நேற்று முன்தினம் ராம்லீலா எனப்படும் ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டது. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவஜோத் சிங் சி்த்துவின் மனைவி நவஜோத் கவுர் தலைமை தாங்கினார். விழா நடந்த இடத்தின் அருகே ரயில் பாதை உள்ளது. மேடான இடத்தில் ரயில் பாதை அமைந்திருப்பதால், அங்கிருந்து ராவணன் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சியை பார்க்க 300க்கும் மேற்பட்டோர் கூடினர். அவர்கள் தண்டவாளத்தில் நின்று இருந்தனர். ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அவை பல வண்ணங்களில், பயங்கர சத்தத்துடன் வெடித்துக் கொண்டிருந்தன. அதை தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து 2 கிமீ தொலைவில்தான் அமிர்தசரஸ் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவுக்கு புறப்பட்ட ரயில், நிகழ்ச்சி நடந்த இடத்தை மெதுவாக கடந்து சென்றது. இதனால், அந்த பாதையில் நின்றிருந்த மக்கள் அருகில் உள்ள தண்டவாளங்களில் விலகி நின்றனர். ஆனால், இந்த ரயில் சென்ற அடுத்த அரை நிமிடத்தில், எதிர் திசையில் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்ற வேகமாக வந்தது. பட்டாசு சத்தத்தில் அந்த ரயிலின் சத்தத்தை மக்கள் யாரும் கவனிக்கவில்லை. அருகே வந்த பிறகுதான் மக்கள் சுதாரித்து கொண்டு ஓடினர். அதற்குள் அவர்கள் மீது ரயில் பயங்கரமாக மோதியபடியே சென்றது. இதனால், 61 பேர் அதே இடத்தில் உடல்கள் துண்டாகியும், நசுங்கியும் இறந்தனர், 72 பேர் படுகாயம் அடைந்து மரண ஓலமிட்டனர். ஓரிரு நிமிடங்களில் பல உயிர்களை பலி வாங்கி விட்ட இந்த விபத்து, நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் இறந்தவர்களுக்காக பஞ்சாப்பில் நேற்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.   இந்நிலையில், இந்த விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தை ரயில்வே உயரதிகாரிகளும், மாநில அரசு அதிகாரிகளும் நேற்று ஆய்வு செய்தனர். அமெரிக்கா  சென்றிருந்த ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், தனது பயண திட்டங்களை ரத்து  செய்து விட்டு நாடு திரும்பி கொண்டிருக்கிறார். இந்நிலையில், விபத்து குறித்து ரயில்வே  இணையமைச்சர் மனோஜ் சின்ஹா கூறுகையில், ‘‘ரயில்வே தவறு காரணமாக விபத்து  நடக்கவில்லை. விபத்துக்கு எங்கள் குறைபாடோ, ரயில் டிரைவரின் தவறோ காரணமல்ல.  அதனால், டிரைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. எதிர்காலத்தில்  ரயில் பாதை அருகே நிகழ்ச்சிகள் நடத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த சோகமான விபத்தை  தடுத்திருக்கலாம். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம்தான் அனுமதி  அளிக்கிறது. விபத்து பற்றி ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தும்’’என்றார்.டிரைவர் விளக்கம்விபத்தை ஏற்படுத்திய ரயிலின் டிரைவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘எனக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டு இருந்தது. அதனால், வழக்கமான வேகத்தில் ரயிலை ஓட்டி வந்தேன். தண்டவாளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருப்பது பற்றி முன்கூட்டியே எனக்கு எந்த தகவலும் தெரியாது’’என்றார்.

மூலக்கதை