சபரிமலையில் 5வது நாளாக பதற்றம் நீடிக்கிறது: ஏடிஜிபி தலைமையில் போலீஸ் குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் 5வது நாளாக பதற்றம் நீடிக்கிறது: ஏடிஜிபி தலைமையில் போலீஸ் குவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் நடை திறந்து 5 நாள் ஆன நிலையில் இன்றும் இளம்பெண்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்ற தகவல் பரவியதால் பரபரப்பு நிலவுகிறது. ஏடிஜிபி தலைமையில் 500க்கும் அதிகமான போலீசார் நிலக்கல் முதல் சன்னிதானம் வரையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக கடந்த 17ம் தேதி நடை திறக்கப்பட்டது முதல் பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.

இளம்பெண்களை அனுமதிக்க கூடாது என்று கூறி பாஜ இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா, காங்கிரஸ், ஐயப்ப பாதுகாப்பு அமைப்பு, ஐயப்பன் ஆச்சார அமைப்பு, ஐயப்ப கர்ம சேனை உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே ஆந்திராவை சேர்ந்த மாதவி, டெல்லியை சேர்ந்த சுகாசினி ராஜ், ஐதராபாத்தை சேர்ந்த தனியார் டிவி பெண் நிருபர் கவிதா, எர்ணாகுளத்தை சேர்ந்த மாடல் அழகி ரெஹ்னா பாத்திமா, திருவனந்தபுரத்தை சேர்ந்த மேரி ஸ்வீட்டி, கொல்லத்தை சேர்ந்த மஞ்சு ஜோசப் ஆகியோர் சபரிமலை தரிசனத்திற்கு செல்ல முயற்சித்தனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இவர்கள் அனைவரும் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் சபரிமலைக்கு இன்றும் இளம் பெண்கள் வருவார்கள் என தகவல் பரவியுள்ளது. இதையடுத்து நிலக்கல் முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏடிஜிபி அனில் காந்த் ஐஜிக்கள் ஜித், மனோஜ் ஆபிரகாம் மற்றும் 5 எஸ்பிக்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. சபரிமலை முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

இதற்கிடையே நாளையுடன் ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடைகிறது. நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

வழக்கமாக கோயில் நடை சாத்தப்படும் நாளில் பிற்பகலுக்கு பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே நாளை மதியத்திற்கு பின்னர் பக்தர்கள் சன்னிதானத்திற்கு செல்ல முடியாது.இதனால் இன்று இளம்பெண்கள் வரலாம் என கருதப்படுகிறது இதுவரை சபரிமலை வந்த இளம்பெண்கள் அனைவரும் முன்கூட்டி தெரிவிக்காமல் திடீரெனத்தான் வந்தனர். எனவே அதுபோல யாராவது திடீரென சபரிமலைக்கு வருவார்களா என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையே இன்று ஞாயிறு விடுமுறை என்பதால், சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தில் அறிக்கை: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தேவசம்போர்டு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. கடந்த வாரம் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பந்தளம் அரண்மனை பிரதிநிதிகள், தந்திரிகள் குடும்பத்தினர், ஐயப்ப சேவா சங்கம் நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேவசம்போர்டு மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தந்திரி குடும்பத்தினர் வலியுறுத்தினார்.

அதை தேவசம்போர்டு ஏற்கவில்லை. இதையடுத்து அரண்மனை பிரதிநிதிகள், தந்திரி குடும்பத்தினர் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

 இந்நிலையில் நாளுக்கு நாள் சபரிமலையில் நிலைமை மோசமானதை தொடர்ந்து, தற்போது நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.

இதுதொடர்பாக தேவசம்போர்டு வக்கீல் அபிஷேக் சிங்வி ஆலோசித்து வருகிறோம் என்றார். இந்நிலையில் நாளை உச்சநீதிமன்றத்தில் தேவஸம்போர்டு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது . இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்க தேவஸம்போர்டு அதிகாரிகள் டெல்லி விரைந்துள்ளனர்

2 பெண்கள் தடுத்து நிறுத்தம்: சபரிமலைக்கு இன்று காலை 10. 15 மணியளவில் ஆந்திராவை சேர்ந்த 2 இளம் பெண்கள் வந்தனர்.

இருவருக்கும் 42 வயதுக்குள்தான் இருக்கும். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு தரிசனத்திற்காக புறப்பட்டனர்.

இதை பார்த்த பக்தர்கள் அவர்களை முற்றுகையிட்டு சரண கோஷம் எழுப்பினர். சிறிது நேரத்திலேயே அங்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசாரும் அங்கு விரைந்தனர்.

பக்தர்களின் எதிர்ப்பால் பயந்து போன அவர்கள் உடனடியாக அங்கிருந்து திரும்பி சென்றனர். விசாரணையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த வாசந்தி, ஆதி சேஷசம்மா என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சபரிமலை செல்வதற்கு பக்தர்கள் எதிர்ப்பு இருப்பது தெரியாமல் இருந்ததாகவும், தற்போது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பி செல்வதாகவும் கூறினர்.


.

மூலக்கதை