61 பேர் பலியான ரயில் விபத்து வழக்கில் அடுத்த நகர்வு: எப்ஐஆரில் எவர் மீதும் குற்றச்சாட்டு பதியவில்லை...நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு; வீடுகள் சூறை

தமிழ் முரசு  தமிழ் முரசு
61 பேர் பலியான ரயில் விபத்து வழக்கில் அடுத்த நகர்வு: எப்ஐஆரில் எவர் மீதும் குற்றச்சாட்டு பதியவில்லை...நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு; வீடுகள் சூறை

அமிர்தசரஸ்: பஞ்சாபில் நடந்த ரயில் விபத்தில் 61 பேர் பலியான நிலையில், சம்பவத்தின் அடுத்த நகர்வாக போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் எவரது பெயரும் குற்றச்சாட்டு பட்டியில் கொண்டு வரப்படவில்லை. ஆனால், தலைமறைவாக உள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வீடுகளை மக்கள் சூறையாடினர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த ரயில் விபத்து சம்பவம் நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில், 61 அப்பாவி உயிர்களை பலிவாங்கிய இந்த விபத்தில், நிகழ்ச்சியை ரயில்வே பாலம் ஒட்டி நடத்துவதற்கு எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை, போலீஸ் பாதுகாப்பு கோரவில்லை.

கார்ப்பரேஷன் அனுமதியும் பெறவில்லை. ரயில்வே துறைக்கும் தெரிவிக்கவில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மாவட்ட நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தலைமை விருந்தாளியாக அம்மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் நவ்ஜோத் சித்துவின் மனைவி கவுர் சித்துவை அழைத்து வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜய் மதன் மற்றும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி 29வது வார்டு கவுன்சிலரான அவரது மகன் சவுரப் மதன் மிது ஆகியோர் மீது பஞ்சாப் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

மேலும், சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அங்கிருந்து கவுர் சித்து சென்றுவிட்டதாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, விஜய் மதன் மற்றும் அவரது மகன் சவுரப் மதன் மிது ஆகியோர், இன்று வரை தலைமறைவாக உள்ளனர்.



இதனால் ஆத்திரமடைந்த மக்கள், மேற்கண்ட இருவரின் வீடுகளை நேற்று சூறையாடினர். இதற்கிடையே, விபத்து நடந்த போது வெளியான வீடியோவில் மாலைகளுடன் காட்சியளிக்கும் நவ்ஜோத் கவுர் சித்துவுக்கு அருகில் இருக்கும் நபர் மைக்கில், ‘மேடம், ரயில்வே பாலங்களில் நிற்பது பற்றி இந்த மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.

5,000 பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். தண்டவாளத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்காக நின்று கொண்டிருக்கிறார்கள், 500 ரயில்கள் கடந்து சென்றாலும் நகர மாட்டார்கள்’ என்று கூறிய அதிர்ச்சி பேச்சு அம்பலமாகியுள்ளது. இந்த வீடியோ எரியும் நெருப்பில் எண்ணெய்யை விட்டது போல், மக்கள் ரயில்வே பாதையில் நிற்பது தெரிந்திருந்துமே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அலட்சியமாக இருந்துள்ளதை காட்டுகிறது.

 இந்நிலையில், அம்மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதன் சிறப்பு அதிகாரி விசாரணை அறிக்கையை நான்கு வாரத்தில் சமர்பிக்க முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டார்.

ரயில்ேவ போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வரிசையில் எவரது பெயரையும் குறிப்பிடவில்லை. உள்ளூர் வருவாய்த்துறையினரிடம் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எப்ஐஆரில், வழக்கு பிரிவுகள் 304ஏ (அலட்சியம் மூலம் இறப்பு ஏற்படுவது), 338 (மற்றவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது அல்லது மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பின் மூலம் துன்பகரமான காயம் ஏற்படுவது) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மதன் குடும்பத்தினர் தான் என்றும், அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

டிரைவர் அறிக்கை: ரயிலின் டிரைவர் (லோகோ பைலட்) அரவிந்த் குமார், தன்னுடைய சார்பில் ரயில்வே அதிகாரிகளிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனக்கு கிரீன் சிக்னல்தான் கொடுக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான மக்கள் ரயில்வே தண்டவாளத்தில் நிற்கிறார்கள் என்பது தொடர்பாக எனக்கு எந்த ஒரு தகவலும் கிடையாது. மக்கள் ரயிலின் மீது கற்களை வீசினர்.

அதனால், பயணம் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அவசரகால பிரேக் பயன்படுத்திய போதிலும், சிலர் ரயிலை பின்தொடர்ந்தனர்.

மிகப்பெரிய கூட்டம், கற்களை எறிந்து ரயிலை தாக்கியது. என் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நான் ரயிலை தொடர்ந்து இயக்கினேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பலியானவர்களிடம் கொள்ளை: அமிர்தசரஸ் ரயில் விபத்தில், 61 பேர் பலியாகினர்.

143 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சம்பவம் நடந்த இரவு, இறந்து போனவர்களின் சர்ட் பாக்கெட்டுகளில் இருந்து பணம், செல்போன், நகைகள் ஆகியவற்றை சிலர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, தீபக் என்பவர் கூறுகையில், ‘விபத்து நடந்த போது, எனது 3 வயது மகளை இழந்தேன். எனது மகனின் கால் முறிந்து உதவிக்காக போராடினேன்.

அப்போது, என் மகனின் பாக்கெட்டில் இருந்து செல்போன் திருட்டு போனது.

 கமல்குமார் என்பவர் கூறுகையில், ‘எனது மகன் தருண் மக்கான் (19) விபத்தில் பலியான நிலையில், அவனின் சர்ட் பாக்கெட்டில் இருந்த விலையுர்ந்த செல்போன் மற்றும் பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனர்’ என்றார். அதேபோல், ஜோதி குமாரி என்பவர் கூறுகையில், ‘எனது மகன் வாசு (17) விபத்தில் பலியானான்.

மீட்பு பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது என் மகனின் பாக்கெட்டில் இருந்த ரூ. 20,000 மதிப்புள்ள செல்போன், கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் ஆகியவை மாயமாகி இருந்தது’ என்றார்.


.

மூலக்கதை