கேரள அரசியலில் பரபரப்பு மாஜி முதல்வர் மீது பலாத்கார வழக்கு...காங்கிரஸ் எம்பியும் தப்பவில்லை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள அரசியலில் பரபரப்பு மாஜி முதல்வர் மீது பலாத்கார வழக்கு...காங்கிரஸ் எம்பியும் தப்பவில்லை

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதாநாயர் அளித்த புகாரின் பேரில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கே. சி. வேணுகோபால் எம்பி ஆகியோர் மீது நேற்று குற்றப்பிரிவு போலீசார் பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல், காற்றாலைகள் அமைத்து தருவதாக பிரபல நடிகை சரிதா நாயர் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன.

இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் சரிதாநாயரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து பல நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

இதற்கிடையே கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் அமைச்சர்களான கே. சி. வேணுகோபால் எம்பி, அடூர்பிரகாஷ், அனில்குமார், ஆர்யாடன் முகம்மது, முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் மீது சரிதா நாயர் அடுக்கடுக்காக பலாத்கார புகார்களை கூறினார்.

இது கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முந்தைய காங்கிரஸ் அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது.

இந்த விசாரணை கமிஷன் முன்பு சரிதாநாயர் ஆஜராகி தன்னை பலாத்காரம் செய்தவர்கள் குறித்து பரபரப்பான தகவல்களை கூறினார். இதற்கிடையே கடந்த வருடம் விசாரணை கமிஷன் அறிக்கை கேரள அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.



அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி உம்மன்சாண்டி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். ஆனால் விசாரணை கமிஷன் அறிக்கையின் படி, யார் மீதும் வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று கேரள அரசுக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனால் உம்மன்சாண்டி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சரிதாநாயர், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் அமைச்சர்களான கேசி.

வேணுகோபால் எம்பி, அடூர்பிரகாஷ், அனில்குமார், ஆர்யாடன் முகம்மது, முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி ஆகியோர் தன்னை பலாத்காரம் செய்ததாக முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் மனு அளித்தார்.

இந்த புகாரின் பேரிலும் உம்மன் சாண்டி உள்பட தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு எதுவும் செய்யாமல் இருந்து வந்தனர்.

ஒரே புகாரின் பேரில் பலர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது. ஆகவே தனித் தனியாக புகார் அளித்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என்று அப்போதைய குற்றப்பிரிவு டிஜிபி ராஜேஷ் திவான் கூறினார்.

இதனால் உம்மன் சாண்டி உள்பட தலைவர்கள் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சமீபத்தில் சரிதாநாயர் உம்மன்சாண்டி மற்றும் கே. சி. வேணுகோபால் எம்பி ஆகியோர் மீது தனித்தனியாக பலாத்கார புகார் அளித்தார்.



இதையடுத்து உம்மன் சாண்டி, கே. சி. வேணுகோபால் ஆகியோர் மீது நேற்று குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக டிஜிபி லோக்நாத் பெக்ரா நிருபர்களிடம் கூறியதாவது: உம்மன் சாண்டி, கே. சி.

வேணுகோபால் எம்பி மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக இயற்கைக்கு மாறான பலாத்கார வழக்கும், வேணுகோபால் எம்பி மீது சாதாரண பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்ட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து குற்றப்பிரிவு எஸ்பி அப்துல் கரீம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்துவார்கள். உம்மன்சாண்டி, கே. சி. வேணுகோபால் எம்பி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


.

மூலக்கதை