அமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : ரயில் விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம்

தினகரன்  தினகரன்
அமிர்தசரஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு : ரயில் விபத்துக்கு காரணமான பரபரப்பு தகவல்கள் அம்பலம்

அமிர்தசரஸ்: அமிர்தசரஸில் தசரா பண்டிகையையொட்டி, ராவணன் உருவபொம்மை எரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை, 62 ஆக உயர்ந்த நிலையில், விபத்துக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல என்று அதன் சேர்மன் ெதரிவித்துள்ளார். மேலும், விழா நடத்துவதற்கான முன் அனுமதி பெறாததால், எவ்வித பாதுகாப்பும் வழங்கப்பட வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  நாடு முழுவதும் நேற்று முதல் தசரா பண்டிகை முன்னிட்டு, ராவணன் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் பகுதியில், நேற்று மாலை 6 மணியளவில் ராவணன் உருவபொம்மை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே, 70 மீட்டர் இடையே ரயில்வே தண்டாளம் செல்கிறது. அதாவது, பதான்கோட், ஜலந்தர் போன்ற பகுதிக்கு செல்லும் முக்கிய ரயில்வே தண்டவாளம் உள்ளது. டாபி ஷாட் என்ற பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியை, உள்ளூர் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். ஆண்டுதோறும் ராவண பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பஞ்சாப் மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்துவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர், இரவு 7 மணியளவில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு தாமதமாக வந்து சேர்ந்தார். முன்னதாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, ராவண பொம்மை எரிக்கப்பட்டது. அதனால், அங்கு குழுமியிருந்த மக்கள் ரயில் தண்டவாளத்தை மறித்து நின்றிருந்தனர். பயங்கர ஒலியுடன் பட்டாசு வெடிக்கும் சத்தத்தில், தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் சத்தமும், ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை. அப்போது, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு செல்லும் ஜலந்தர்  எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியாக அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதே  நேரத்தில், எதிர்திசையில் மற்றொரு ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த ரயில்கள், தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது கண்ணிமைக்கும் வேகத்தில் மோதிவிட்டுச் சென்றன. விபத்து நடந்த இடத்தில் மட்டும், 300க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரயில்கள் மிக நெருக்கமாக வந்தபோதுதான், மக்கள் தப்பிக்க வழி இல்லாததால், கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நடந்திருப்பது தெரியவந்தது. போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால், எத்தனைப் பேர் பலியானார்கள், காயமடைந்தனர் என்ற முழுமையான தகவல்  இன்னும் கிடைக்கவில்லை. இருந்தும், இன்றைய காலை நிலவரப்படி, அமிர்தசரஸ் சிவில் மருத்துவமனையில் 40 பேரின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், 24 பேரின் விபரங்கள் தெரிந்துள்ளது. அதேபோல், குருநானக் அரசு மருத்துவமனையில் 20 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 8 பேரின் அடையாளங்கள் தெரியவந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கோர சம்பவத்தை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் அமைச்சர் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், தனது காரில் ஏறி  புறப்பட்டு சென்று விட்டார். இந்த விபத்தால், அந்த பாதையில் ரயில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் தலைமையில்  நிகழ்ச்சி நடந்ததால், விபத்திற்கு இவர் தான் காரணம் என்று, எதிர்க்கட்சிகளும், உள்ளூர் பிரமுகர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து, நவ்ஜோத் கவுர் கூறுைகயில், ‘‘விழா நடந்து கொண்டிருந்தபோது நான்  அங்கிருந்து கிளம்பிவிட்டேன். சம்பவம் நடந்த போது நான்அங்கு இல்லை. எனவே,  இந்த விபத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம்’’ என்றார். விபத்துக்கான காரணங்கள் என்ன?      ஜோதா பதக் லெவல் கிராஸ் பகுதியின் 27வது ‘கேட்’டில், நேற்று மாலை 6.45 மணியளவில் விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்தில் 300க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை மறித்தும், ஓரங்களிலும் நின்றிருந்தனர்.     தசரா விழா தொடர்பாக விழா ஏற்பாட்டளர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை.     மாலை 6 மணிக்கு ராவண பொம்பை எரிப்பு நடப்பதாக இருந்தது. ஆனால், முதன்மை விருந்தினரான அமைச்சர் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் வர தாமதமானதால், இரவு நெருங்க நெருங்க கூட்டம் பரவலாக ரயில்வே தண்டவாள பகுதியில் தஞ்சம் அடைந்தது.      300க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த இடத்தில், அதிவேகமாக வந்த ரயில்கள் எவ்வித ஒலியையும் எழுப்பாமல் கடந்து சென்றுள்ளது. அதிவேகமாக வந்த ரயில்கள், கூட்டத்தை பார்த்து வேகத்தை குறைத்தும் செல்லவில்லை.      மாவட்ட நிர்வாகம் மற்றும் தசரா குழு முறையான அனுமதி பெறாததால், உள்ளூர் போலீசோ அல்லது ரயில்வே ேபாலீசோ பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. அதனால், மெதுவாக செல்லவோ அல்லது நின்று செல்லவோ வாய்ப்பின்றி போனது.      ஆண்டுேதாறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு கேட்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. உள்ளூர் நிர்வாகமும் அதை கண்காணிப்பதில்லை.     நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு 100 மீட்டர் தூரத்தில் விபத்து நடந்துள்ளது. அது, ராவண பொம்மை எரிப்பு இடத்திற்கு 70 முதல் 80 மீட்டர் தூரத்தில் இருந்தது.      ரயில்வே தண்டவாளம் செல்லும் வழியிலோ, ராவண பொம்பை எரிப்பு மேடையிலோ எவ்வித தடுப்பு வேலியும் இல்லை. நாங்கள் பொறுப்பல்ல!வடக்கு ரயில்வே சேர்மன் அஸ்வனி லேகானி, நேற்றிரவு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு கூறுகையில், ‘‘விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜலந்தர் - அமிர்தசரஸ் சாலை மிகவும் முக்கியமானது. ரயில்கள் அந்த இடத்தில் மெதுவாக செல்ல அனுமதி கிடையாது. அதனால், விபத்துக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல. இருந்தும், தொடர்ந்து விசாரணை மற்றும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். 2018ம் ஆண்டு விபத்துகள்;கடந்த மே மாதம் 6ம் தேதி ஹவுரா - மும்பை மெயில் ரயிலின் லோகோ பைலட் (டிரைவர்) ஒருவர், ரயிலில் இருந்து விழுந்து பலியானார். கடந்த ஜூன் 24ம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருமால்பூர் வரை செல்லும் மின்சார ரயில், பரங்கிமலை ரயில் நிலையத்தை நெருங்கியபோது, ரயில் பெட்டிகளில் தொங்கியபடி வந்தவர்கள் தடுப்புச் சுவர் உரசியதால் கீழே விழுந்தனர். கீழே விழுந்ததிலும் ரயில் சக்கரங்களில் சிக்கியும் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த அக்ேடாபர் 10ம் தேதி ரேபரேலியில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 7 பேர் பலியாகினர். தற்போது, நேற்று அமிர்தசரஸ் ரயில் விபத்தில் 61 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு திருவனந்தபுரம் - கோழிக்கோடு ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், வாண வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 3 பேர் ரயில் மோதி பலியாகினர். நீதி விசாரணை தேவைமாஜி முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், விபத்து குறித்து கூறுகையில், ‘‘மிகவும் துரதிஷ்டவசமான விபத்து நடந்துள்ளது. மாநில அரசு விழா ஏற்பாட்டுக்கு சரியான பாதுகாப்பு ெசய்து கொடுக்கவில்லை. உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதற்கிடையே, இன்று காலை பஞ்சாப் உள்ளாட்சி அமைச்சர் சித்து, குருநானக் மருத்துவமனை சென்று, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உயர்மட்ட விசாரணை:விபத்து குறித்து, அமிர்தசரஸ் காவல்துறை ஆணையர் எஸ்.எஸ்.வஸ்தவா  கூறுகையில், ‘‘60 முதல் 70 பேர் வரை விபத்தில் உயிரிழந்திருக்கக் கூடும்.  தற்போது 62 ேபரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விபத்து குறித்து உயர்மட்ட  அளவிலான விசாரணை நடைபெற்று வருகிறது. சடலங்கள் அடையாளம் காணப்பட்டு,  சம்பந்தப்பட்டவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி துரிதமாக நடக்கிறது.  காயமடைந்தவர்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விழா  நடத்தியவர்கள் முறையாக அனுமதி பெற்றனரா போன்றவை குறித்து விசாரணை  நடக்கிறது. முதற்கட்ட விசாரணையில், அவர்கள் உள்ளூர் போலீஸ், தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் நிகழ்ச்சி நடத்தி உள்ளதாக தெரிகிறது’’ என்றார்.26 ரயில்கள் நிறுத்தம்:அமிர்தசரஸ் காங்கிரஸ் பிரமுகரின் மகனான விஜய் மதன் என்பவர், 29வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது ஏற்பாட்டின்படி தான், அமைச்சர் சித்துவின் மனைவியும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த கோரவிபத்துக்கு, சித்து மற்றும் அவரது மனைவியும் பொறுப்பு என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இன்று காலை முதல் அமிர்தசரஸில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடக்கிறது. இதில், 2 ரயில்கள் திருப்பி விடப்பட்டன. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 5 ரயில்கள் பாதிவழியில் சில ஸ்டேசன்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 13 ரயில்கள் பாதி வழியில் நிற்கின்றன. மொத்தமாக, 26 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், போலீசார் ஆங்காகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், அவசர ஆலோசனையாக டெல்லி விரைந்துள்ளார். இவர், மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை சந்திக்க உள்ளார். மேலும், அமைச்சர் சித்து மற்றும் அவரது மனைவி மீது புகார் கூறப்படுவதால், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்திையயும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மூலக்கதை