'வட சென்னை' வெற்றியும் சர்ச்சையும்!

தினமலர்  தினமலர்
வட சென்னை வெற்றியும் சர்ச்சையும்!

தமிழ் பட ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த 'வட சென்னை' படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், படத்தில் நிறைய ஆபாச வசனங்கள் இடம் பெற்றிருப்பது, ரசிகர்களையும், பொதுமக்களையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

இந்நிலையில், 'வட சென்னை' படத்தைப் பார்க்க வந்த, வட சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், படத்தில் இடம் பெறும் காட்சிகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, 'வட சென்னை என்றாலே, மக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் தான் நடந்து கொள்வர் என்பது போன்றத் தோற்றத்தை படத்தின் மூலம் இயக்குநர் வெற்றி மாறன் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்' என, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், 'வட சென்னை என்றாலே, குப்பையும்; கூளமுமாகத்தான் இருக்கும் என்பது போலவும், இங்கிருக்கும் பெண்கள், ஆபாசமாகவும்; அசிங்கமாகவும் தான் பேசுவர் என்பது போலவும், இங்கிருக்கும் இளைஞர்கள் எப்போதும் கத்தியும், ரத்தமாக திரிகின்றனர் என்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமல்ல; வட சென்னை பகுதியில் இருக்கும் மீனவர்கள், படகுகளை கள்ளக் கடத்தலுக்குத் தான் பயன்படுத்துகின்றனர் என்பது போல படமாக்கினால், மற்ற பகுதிகளில் இருக்கும் மக்கள், வட சென்னை மக்கள் குறித்து என்ன நினைப்பார்கள்? ஆக, வட சென்னை மக்கள் மற்றும் அவர்களது அன்றாட நிகழ்வுகள் குறித்த தவறான புரிதல் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது' என குறிப்பிட்டுள்ளனர்.

எப்படியோ படம் வெற்றி அடைந்தாலும், புதிது புதிதான சர்ச்சைகளால் 'வட சென்னை' பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மூலக்கதை