அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு

திரையுலகை சேர்ந்த நடிகைகள் உள்ளிட்ட பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை மீ டூ மூலமாக பகிர்ந்து வருகின்றனர். இதில் இப்போது லேட்டஸ்டாக சிக்கியிருப்பவர் ஆக்சன் கிங் எனப்படும் நடிகர் அர்ஜுன்.. அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இவர் நிபுணன் படத்தில் அர்ஜுனின் மனைவியாக நடித்தவர்.

இதுபற்றி சமூகவலைதளத்தில் விரிவாக பகிர்ந்துள்ள ஸ்ருதி ஹரிஹரன், “நிபுணன் படத்தில் அர்ஜுனின் மனைவியாக நடித்தேன். அர்ஜுனின் படங்களை பார்த்து அவருடன் இணைந்து நடிக்கப்போகிறேன் என ஆவலாக இருந்தேன். சில நாட்கள் படப்பிடிப்பு நன்றாகத்தான் போனது. ஒருநாள் நீளமான வசனங்களை பேசிவிட்டு நாங்கள் இருவரும் கட்டியணைக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது.

இதற்காக ரிகர்சல் செய்தபோது வசனங்களை பேசி முடித்தபின், நான் சற்றும் எதிர்பாராத விதமாக தொடக்கூடாத இடங்களில் தொட்டு, அப்படியே அவரை நோக்கி என்னை இழுத்தார். இதுபோன்று ரிகர்சலில் இருப்பதாக எனக்கு சொல்லவில்லையே என நான் அதிர்ச்சியாகி நிற்க, அவரோ இயக்குனரை பார்த்து, டேக் போகும்போது காட்சியில் இந்த மாதிரி செய்து கொள்ளலாமா என ஐடியா கேட்பது போல பாவ்லா காட்டினார்.

எனக்கு கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டாலும் அப்போது என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை. அதன்பின் ஷூட்டிங் நடந்த நாட்களில் அவரது தொந்தரவு வேறு வேறு விதமாக இருந்தது....” என மிக நீண்ட புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் ஸ்ருதி ஹரிஹரன்.

தொடர்ந்து பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிவரும் நிலையில் நடிகர் அர்ஜுனும் அந்த பட்டியலில் இணைந்திருப்பது மேலும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

மூலக்கதை