செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக கைதானவர்கள் அறை ஜன்னலை உடைத்து 11 தமிழர்கள் தப்பியோட்டம்: ஆந்திராவில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக கைதானவர்கள் அறை ஜன்னலை உடைத்து 11 தமிழர்கள் தப்பியோட்டம்: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திராவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக கைதான 11 தமிழர்கள் வனத்துறை அலுவலக ஜன்னலை உடைத்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் ராஜம்பேட்டை வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 11 தமிழர்களை கைது செய்தனர். பின்னர், ராஜம்பேட்டை வன அலுவலகத்தில் உள்ள அறையில் வைத்து பூட்டினர். இந்நிலையில் நேற்று அதிகாலை அறையில் இருந்த கண்ணாடி கதவுகள், அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டும் கிடந்ததை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அங்கு அடைத்து வைக்கப்பட்ட 11 தமிழர்களும் தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து  பஸ் நிலையம், ரயில் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே கடந்த மாதம் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 650 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகளும் கடப்பா வன அலுவலகத்தில் இருந்து மாயமாகியுள்ளது. இதனால் வனத்துறையில் உள்ள சிலர் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுப்படுகின்றனரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை