இஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு

தினகரன்  தினகரன்
இஸ்தான்புல் தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டது உண்மை: ஒப்புக்கொண்டது சவுதி அரசு

ரியாத்: பத்திரிகையாளர் கசோகி தன்னுடைய தூதரகத்தில் கொல்லப்பட்டதை முதல் முறையாக சவுதி அரேபியா அரசு ஒப்புக் கொண்டுள்ளது.அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெற்றவரும், அந்நாட்டில் வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் பணி புரிந்து வந்தவருமான ஜமால் கசோகி, கடந்த 2ம் தேதி துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்றார். அதன் பிறகு அவர் மாயமானார். தனது திருமணத்திற்கான ஆவணங்களை பெறுவதற்காக சவுதி அரேபிய தூதரகத்துக்கு அவர் சென்றிருந்தார். சவுதி அரேபிய அரசு மற்றும் அந்நாட்டின் இளவரசர் குறித்து தொடர்ந்து விமர்சனங்களையும், பல்வேறு கட்டுரைகளையும் கசோகி எழுதி வந்த நிலையில், தூதரகத்துக்கு உள்ளே அவர் மாயமானது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனிடையே, கசோகி மறைவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். சவுதியில் வரும் 23ம் தேதி நடைபெறும் நிதி மாநாட்டையும் சர்வதேச நாடுகள் புறக்கணித்துள்ளன. தன் மீதான குற்றச்சாட்டை சவுதி மறுத்து வந்த நிலையில், பத்திரிகையாளர் கசோகி தன்னுடைய இஸ்தான்புல் தூதரகத்தில் கொல்லப்பட்டதை அவர் மாயமான இரண்டு வாரங்கள் கழித்து முதல் முறையாக சவுதி அரேபியா ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அகமது அல் அசிரி, சவுத் அல் குவாதானி என்ற இரண்டு உளவுத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து சவுதியின் அட்டர்னி ஜெனரல் கூறுகையில், “இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தில் அங்குள்ள அதிகாரிகளை கசோகி சந்தித்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் கொல்லப்பட்டு இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேரை கைது செய்துள்ளதாகவும் சவுதி அரசு அறிவித்துள்ளது. மேலும், ‘இளவரசர் தலைமையில் அமைச்சரவை குழு அமைக்கப்பட்டு, உளவுத்துறை  நிறுவனத்தின் அதிகாரங்கள் குறித்து வரையறை செய்யப்படும்’ என்றும் சவுதி மன்னர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை