துவங்கியது சீசன்! தள்ளுபடி, சலுகைகளில் போட்டா போட்டி:கோவையை தொற்றியது தீபாவளி உற்சாகம்

தினமலர்  தினமலர்
துவங்கியது சீசன்! தள்ளுபடி, சலுகைகளில் போட்டா போட்டி:கோவையை தொற்றியது தீபாவளி உற்சாகம்

ஆயுதபூஜையை ஒட்டிய தொடர் விடுமுறையால், கோவையில், பண்டிகை சீசனுக்கான தள்ளுபடி, சலுகை மற்றும் 'ஷாப்பிங்' கொண்டாட்டங்கள் களைகட்டத் துவங்கியுள்ளன.
முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும், இந்தாண்டு, ஓரளவுக்கு நல்ல மழை பெய்து, அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன; விவசாயக் குடும்பங்கள், நம்பிக்கையோடு பயிர் செய்துள்ளன. கட்டுமானத் துறையிலும், சற்று முன்னேற்றம் காணப்படுகிறது; பிற தொழில்களில் இருந்த சுணக்கமும் குறைந்து, விரைவில் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. இதனால், இந்தாண்டு தீபாவளி நன்றாயிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டில், கடைசி இரு வாரங்கள் மட்டுமே, தீபாவளி விற்பனை, உச்சத்தை எட்டியது. ஆனால், இந்தாண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பே, தீபாவளி உற்சாகம் தொற்றிக் கொண்டது; எங்கெங்கு காணினும், விளம்பரமயமாக உள்ளது. ஜவுளிக்கடைகள், பர்னிச்சர்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், எலக்ட்ரானிக்ஸ், வாகன விற்பனை நிறுவனங்கள், சலுகைகளை போட்டி போட்டு, வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., அமலாக்கம், 'ஆன்-லைன்' வர்த்தகம் போன்ற காரணங்களால், கடந்த இரு ஆண்டுகளாக, வர்த்தகத்தில் கடுமையான பாதிப்பு இருந்தது. நடப்பாண்டு, எதிர்பார்ப்பை விட அதிகளவில் வர்த்தகம் இருப்பதாக, பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளும் தகவல் கூறுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, புதிய வாகன விற்பனை மட்டும் சற்று மந்தமாக இருக்கிறது.மற்றபடி, அனைத்து கடைகளிலும் கூட்டம் திரளத் துவங்கியுள்ளது; ஆயுதபூஜையை ஒட்டி, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால், கடந்த மூன்று நாட்களும் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, ராஜ வீதி, காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய வர்த்தகப் பகுதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக, ஜவுளிக்கடைகளில் புதுப்புது பேஷன்களில் துணிகள் குவிந்துள்ளதால், அதிக கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.அதேநேரத்தில், மாலை நேரத்தில் மழை பெய்வதால், ரோட்டோர சிறு வியாபாரிகளின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் இருந்து, வார நாட்களிலும் மாலை நேரங்களில், கூட்டம் அதிகரிக்கும் என்பதால், மக்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை, மாநகர போலீசார் மேற்கொள்வது அவசர அவசியம்.-நமது நிருபர்-

மூலக்கதை