ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,

தினமலர்  தினமலர்
ஆசிய ஹாக்கி : இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,

மஸ்கட்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஓமனில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ், 200வது சர்வதேச போட்டியில் களமிறங்கினார். முதல் நிமிடத்தில் 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் பாகிஸ்தான் வீரர் இர்பான் ஜூனியர் கோல் அடித்தார். 24வது நிமிடம் கேப்டன் மன்பிரீத் சிங் கோல் அடிக்க முதல் பாதியில் ஸ்கோர் 1-1 என சமனில் முடிந்தது.

இரண்டாவது பாதி துவங்கிய சிறிது நேரத்தில் மன்தீப் சிங் (33 வது நிமிடம்) 'ரிவர்ஸ் பிளிக்' முறையில் கோல் அடிக்க இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து தில்பிரீத் சிங் (42வது) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இந்திய அணி ஜப்பானை சந்திக்கிறது.

மூலக்கதை