வலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்

தினகரன்  தினகரன்
வலுவான இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை: அறிமுகமாகிறார் ரிஷப் பன்ட்

கவுகாத்தி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, கவுகாத்தி பரசபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி கவுகாத்தியில் இன்று பகல்/இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான மொத்தம் 12 வீரர்கள் அடங்கிய இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இளம் வீரர் ரிஷப் பன்ட் (21 வயது) அறிமுக வீரராகக் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேகளை இறுதி செய்வதற்கான வாய்ப்பாக இந்த தொடர் அமையும். எம்.எஸ்.டோனி விக்கெட் கீப்பராக உள்ளதால், ரிஷப் பன்ட் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட உள்ளார். அந்த வகையில் டோனிக்கும் சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 11 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலில் இடம் பிடிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, கலீல் அகமது இடையே போட்டி நிலவுகிறது. ரோகித், தவான், கோஹ்லி, ராயுடு, பன்ட், டோனி, ஜடேஜா என்று இந்திய அணியின் மிக வலுவான பேட்டிங் வரிசை, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் - சாஹல் கூட்டணியை சமாளிப்பதும் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப் பெரிய சவால் என்பதில் சந்தேகமில்லை. சொந்த மண்ணில் முழு பலத்துடன் களமிறங்கும் இந்தியாவுக்கு, அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் எந்த அளவுக்கு ஈடு கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தொடக்க வீரர் எவின் லூயிஸ் சொந்த காரணங்களுக்காக விலகி உள்ளதும் வெஸ்ட் இண்டீசுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. அந்த அணியில் மார்லன் சாமுவேல்ஸ் (37 வயது, 199 ஒருநாள் போட்டி), கெமார் ரோச் (30 வயது, 72 ஒருநாள் போட்டி) அனுபவ வீரர்களாக உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் சொதப்பினாலும், நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சாதாரணமாக எடைபோட முடியாது என்பதால் இப்போட்டி கடைசி பந்து வரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, எம்.எஸ்.டோனி, ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது, உமேஷ் யாதவ். வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் ஆலன், சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, ஹேம்ராஜ் சந்தர்பால், ஷிம்ரோன் ஹெட்மயர், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், கியரன் பாவெல், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், ரோவ்மன் பாவெல், கெமார் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஒஷேன் தாமஸ், ஒபெட் மெக்காய். * 10000 ரன் மைல்கல்லை குறைந்த இன்னிங்சில் (259) எட்டிய வீரர் என்ற சாதனை சச்சின் வசம் உள்ளது. அதை முறியடிக்க கோஹ்லிக்கு இன்னும் 221 ரன் தேவை. தற்போது 9779 ரன் எடுத்துள்ள அவர் இதற்கு சச்சினை விட 76 இன்னிங்ஸ் குறைவாகவே எடுத்துக் கொண்டுள்ளார்.* தவான் இந்த தொடரில் 177 ரன் எடுத்தால், 5000 ரன் மைல்கல்லை மிக விரைவாக எட்டிய இந்திய வீரர் என்ற கோஹ்லியின் சாதனையை தகர்க்கலாம்.* இந்திய மண்ணில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் இதுவரை ஒயிட்வாஷ் தோல்வி கண்டதில்லை.

மூலக்கதை