பைனலில் சாய்னா: கிடாம்பி ஏமாற்றம்

தினகரன்  தினகரன்
பைனலில் சாய்னா: கிடாம்பி ஏமாற்றம்

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார். அரை இறுதியில்  இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை நேற்று எதிர்கொண்ட சாய்னா அதிரடியாக விளையாடி 21-11 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 21-11, 21-12 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக கால் இறுதியில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவுடன் மோதிய சாய்னா 17-21, 21-16, 21-12 என்ற கணக்கில் போராடி வென்றார். இறுதிப் போட்டியில் அவர் சீன தைபே வீராங்கனை டாய் ட்ஸூ யிங்குடன் மோதுகிறார். கடந்த 2012ல் டென்மார்க் ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா, அதன் பிறகு தற்போது தான் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் சக இந்திய வீரர் சமீர் வர்மாவை 22-20, 19-21, 23-21 என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், அரை இறுதியில் உலகின் நம்பர் 1 வீரர் கென்டோ மொமோடாவுடன் (ஜப்பான்) நேற்று மோதினார். இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய கென்டோ 21-16, 21-12 என்ற நேர் செட்களில் வென்றார். இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ள 12 போட்டிகளில் கென்டோ 9-3 என முன்னிலை வகிக்கிறார்.

மூலக்கதை