அன்னூரின் மேற்குப் பகுதியில் விடிய விடிய பெரு மழை! நிரம்பிய நீர்நிலைகள்; நீர் சூழ்ந்த குடியிருப்புகள்

தினமலர்  தினமலர்
அன்னூரின் மேற்குப் பகுதியில் விடிய விடிய பெரு மழை! நிரம்பிய நீர்நிலைகள்; நீர் சூழ்ந்த குடியிருப்புகள்

அன்னுார்:அன்னுாரின் மேற்குப் பகுதியில், விடிய விடிய பெய்த கன மழையால், இரு ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்பின. நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.அன்னுாரின் மேற்கு பகுதியான குப்பேபாளையம், காட்டம்பட்டி ஊராட்சிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு துவங்கிய மழை, நேற்று அதிகாலை 5:00 மணி வரை தொடர்ந்தது.
பின்னர் நேற்று மதியமும் ஒன்றரை மணி நேரம் கன மழை பெய்தது.குப்பேபாளையம், தனியார் கல்லுாரியில் உள்ள மழைமானிப்படி, 12.5 செ.மீ., மழை அப்பகுதியில் பெய்துள்ளது.கன மழையால், குப்பேபாளையத்திலுள்ள, 40 அடி அகலமும் ஒரு கி.மீ., நீளமும் கொண்ட குளமும், போடி திம்மம்பாளையம் குளமும் நிரம்பின. நரியான் தோட்டம், வவ்வால் தோட்டம், மாகாளியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள தடுப்பணைகளில் நிரம்பி வழிந்து நீர், ரோட்டில் செல்கிறது. குளங்கள் நிரம்பியதால் மகிழ்ச்சியடைந்தாலும், செம்பாக்கவுண்டன் புதுார், கல்யாண சுந்தரம் நகரில் பல வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் சோகமடைந்தனர். போடி திம்மம்பாளையம் காலனியை வெள்ள நீர் சூழ்ந்ததால், வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.ஏராளமான வாழை தோட்டங்கள், தென்னந்தோப்புகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.அதேபோல், காட்டம்பட்டி ஊராட்சியிலுள்ள தடுப்பணைகளும், குட்டைகளும் நிரம்பின. அன்னுார் தாலுகாவில் பெரிய குளமான காட்டம்பட்டியில் உள்ள 140 ஏக்கர் குளத்தில், 25 சதவீதம் நீர் தேங்கியுள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்றுங்க...முன்னாள் ஊராட்சி தலைவர் சாமிநாதன் கூறுகையில், ''கடந்த 10 ஆண்டுகளில் இப்படி ஒரு மழை பெய்தது இல்லை. குப்பேபாளையம் ஊராட்சியில் உள்ள குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்பியுள்ளன. நீர்நிலை நிரம்பி வழியும் தண்ணீர் காட்டம்பட்டியிலுள்ள 140 ஏக்கர் குளத்திற்கு செல்கிறது. மழை நீர் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் செல்கிறது. வருவாய்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

மூலக்கதை